வெந்து தணிந்த நாட்கள். – ஈழத்து சுந்தர்

457 0

வெந்து தணிந்த நாட்கள்.
*** **** ***
இந்தியாவின் ஆசீர் வாதத்தில்…
ஈழத்தமிழன் இறையாண்மை பறிக்க
திட்டம் வகுத்தார்கள்…!
உச்சக் கட்ட யுத்தம் ஒன்றை செய்யத் திட்டமிட்ட சிங்களத்தை…
ஆயுதங்கள் அள்ளிக் கொடுத்து  ஆசிர்வதித்தார்கள்!

போட்டி போட்டு பூகோள அரசியலில் ஈழத் தமிழரை அழித்தார்கள்…
உலகமே உடந்தையாகி இருந்தது..
புலிகளை அழிக்க வேண்டும் என்றால் அந்த  மக்களையும் சேர்த்தே அழிக்க வேண்டும்!

சிந்திக்க முடியாத ஒரு கூட்டமாக நிந்திக்க நினைத்தனர்…
ஐநா அலுவலகத்தை அகற்றிவெளியேற்றி
ஐ சி ஆர் சியை வெளியேற்றி விட்டார்கள்!
சர்வதேச  நிறுவனங்களை அகற்றி விட்டார்கள்!

பொருளாதாரத் தடை மருந்துத்தடை
வந்து விழுந்தது முதலில்!
உணவேதும் அனுப்பாமல் உயிர்களை வாட்டி வதைத்து புதைக்க நினைத்தார்கள்!

புலிகளின் பிரதேசம் ஒரு பொருளாதரபோருக்கு முகம் கொடுக்க எதிர்பார்த்து இருந்தார்கள்!

கஞ்சிக்கு கெஞ்சியது காலம் ….!
விருந்தோபல் செய்து மகிழ்ந்து வாழும் தமிழன் மரபு…
இன்று கஞ்சிக்கு கெஞ்சி நிக்கிறது கந்தறுந்து!

மருந்துக்கு வழியின்றி உயிர்கள்
பறிபோகிறது..!
யுத்தகளம் மக்களுடன் துடிக்கிறது…!
மக்கள் வெள்ளம் யுத்தத்தின் முன்னே
அழுகிறது..
அத்துமீறிய அவலங்கள்!

தமிழன் சொத்துகள்-சுகம் செத்துக்கிடக்கிறது…
கஞ்சிகொடுத்து காப்பாற்ற துடிக்கிறது மனம்!

கந்தல் ஆடையுடன் நடைப்பிணம்..
கருகிய முகம்..!
அழுகிற முகம்!
அவல முகம்
அண்ணாந்து பார்க்கவில்லை
அனைத்துலகம்!

அரவணைத்து பார்த்தது பிரபாகரன் கரம்…
கஞ்சி கொடுத்து காப்பாற்றும் நோக்கம்!

மருந்துத்தடை!
மெலிந்த உடல் மேனியில் ஆடை தொங்கும் விதம்..
எலும்புகளால் பொருத்தப்பட்ட உடல்
கண்ணுக்கு தெரிந்தது!

கண்ணுக்கு தெரியாத எலும்புக்காடுகள்…
எழுந்து நடக்கிறது!
சதை மெலிந்து கோலம் அப்படி ஆனது மோசம்!

உப்புக் காற்றில் கறுத்து போன முகம்…
சீப்பைக் காணாத தலை சிகையலங்காரம் மறந்தது!

குளிப்பு முழுக்கு இல்லை
உடை மறைப்பு  மாற்ற
இடம் இல்லை…!
நடுத்தெருவில் நாலு
மாதம் படுத்திருந்தோம்!

நச்சு வாயுகளை சுவாசித்தோம்..
அறுசுவை எதுவென
மறந்திருந்தோம்..
குடியிருப்பை குழியாக செய்திருந்தோம்!

விழுப்புண்கள் பல உடலில் ஏந்தியிருந்தோம்…
விம்பி அழ முடியாமல் சோர்ந்திருந்தோம்!

படுத்துறங்க நேரமின்றி விழித்திருந்தோம்..
படுகாய உடல் மணக்க சகித்திருந்தோம்..!

மனம் பதைபதைக்க
உணர்வுகளை புதைத்திருந்தோம்..
பசியோதும் உணராமல் சில நாட்கள் வாழ்வோம்!

பஞ்சமில்லாது எறிகணைகள் – பல வகைகள் ஏந்திநின்றோம்
உயிர் எரிய பார்த்து வதங்கி நின்றோம்!

வயிறெரியும் வலியை பொறுத்துநின்றோம்…
படுகாயம் அடைந்த பல பேரை மீட்க முடியாமல் கடந்து வந்தோம்!

அவலக்குரலை
கேட்டபோதும்..
ஆதரவு கொடுக்க முடியாமல்
எகிறி ஓடினோம்..!
அடுக்கடுக்காய் எறிகணைகள்
அள்ளி அள்ளி உயிர்களை எடுத்துக்கொண்டிருந்த நேரம்…!

கஞ்சல் ஆடை
கையறுத்த இரத்தவாடை மெய்மறந்து நின்ற  வேளை….
மேனிபடபடக்க இரத்தச் சகதியில் உடல் தோய்ந்து உருகிப்போன காலம்!

ஒட்டு மொத்தத்தில் அது
வெந்து தணிந்தது…
ஆனாலும் வேகாது
உள்ளிருக்கும் தாகம்!

-ஈழத்து சுந்தர்-