பெண் போராளிகளின் படங்களைத் தாங்கிய நிகழ்வு- ஸ்ரீதரன், வேழமாலிகிதன் ஆகியோர் வாக்குமூலம் வழங்கினர்

32 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் கிளிநொச்சி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இருவரிடமும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் அன்னை பூபதியின் உருவப்படத்துடன், விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளின் படங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டமை தொடர்பாக கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இன்று பொலிஸார் விசாரணைக்காக அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், “குறித்த தினத்தன்று மகளிர் தின நிகழ்வில் நானும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டோம்.

அங்கு அன்னை பூபதியின் திருவுருவப் படத்துடன், பெண் போராளிகள் சிலரின் படங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன. குறித்த சம்பவம் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்படும் ஒருவர், தனது குடும்பத்தில் போராட்ட காலத்தில் சகோதரர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், மீண்டும் இளைஞர்களை போராட்ட சிந்தனைக்குள் அழைத்துச் செல்லும் செயற்பாட்டில் நாம் இருவரும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்து முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக ஏற்கனவே விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் கிடைத்த தகவல்கள் போதாது எனத் தெரிவித்து இன்று மீண்டும் எம்மை அழைத்து நீண்ட நேரம் வாக்குமூலம் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.