யாழில் இராணுவம் துப்பாக்கிச் சூடு : படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!

321 0

யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை (15.05.2020) ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடடிப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ள அந்தவேளை, இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இராணுவத்தினர் மறித்தனர்.

எனினும் அதனை மீறி சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என ஆரம்ப விசாரணைகளில் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதன் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இளைஞன் வீட்டுக்குச் சென்று அவசர உதவி அம்புலன்ஸ் சேவையில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குருதிப்போக்கு உள்ளபோதும் இளைஞன் பாதுகாப்பாக உள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கையில் படுகாயமடைந்த படைச்சிப்பாய், மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.