முன்னாள் போராளி கண்ணதாசன் விடுவிக்கப்படுவாரா?

295 0

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றும் க.கண்ணதாசன் வழக்கில் அவர் குற்றாவாளியாக காணப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீள் விசாரணை நடத்துவதா அல்லது அவரை விடுவிப்பதா என்பது குறித்து எதிர்வரும் ஜூலை மாதம் 14ம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு பெண் ஒருவரை கடத்தி சென்று இணைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பாளித்து முன்னாள் போராளியான குறித்த விரிவுரையாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனு நேற்று (13) மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்ணான்டோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது மன்றில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் குமார் ரட்ணம், ‘குறித்த தீர்ப்பு தொடர்பில் முழுமையாக உடன்பட முடியாவில்லை எனவும், அதனால் இந்த விவகாரத்தை மீள விசாரணை செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும்.’ – எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் மேன்முறையீட்டு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ‘சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் ரட்ணத்தின் கருத்தை மேற்கோள் காட்டி, தனது சேவை பெறுநரான க.கண்ணதாசனை விடுவிக்க வேண்டும்’ – என கோரினார்.

இந்நிலையில் மேன் முறையீட்டு மனுதாரரை எதிர்வரும் ஜூலை 14ம் திகதி மன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், அன்றைய தினம் மீள் விசாரணைக்கு உத்தரவிடுவதா அல்லது விடுவிப்பதா என்பது குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கவுள்ளதாக – அறிவித்தது.