கரோனா நோய்த்தொற்றுப் பரவலுக்கு வியாபாரிகள் காரணமல்ல; முதல்வரின் குற்றச்சாட்டுக்கு விக்கிரமராஜா மறுப்பு

276 0

கரோனா நோய்த்தொற்றுப் பரவலுக்கு வியாபாரிகள் காரணமல்ல என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மே 13) மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து மக்களிடம் உரையாற்றியபோது, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவியதற்கு, சந்தையை இடம் மாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்காததே காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று (மே 14) சென்னை, கே.கே.நகரில் செய்தியாளர்களிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:

“தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தபோது ஒரு வாரம் கோயம்பேடு சந்தை உட்பட அனைத்துக் கடைகளையும் அடைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவற்றை அடைக்கக் கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியது.

ஆனால், இன்று வியாபாரிகள் மீது தவறான எண்ணங்கள் பரப்பப்பட்டிருக்கின்றன. அதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மறுப்பு தெரிவித்துக்கொள்கிறது. தொற்றுக்கு வியாபாரிகள் ஒருபோதும் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. இந்தத் தொற்று ஏற்பட்டபோதிலும், உயிரைத் துச்சமென மதித்து, மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியவர்கள் வணிகர்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த இழப்பீடுகளைச் சரிசெய்து கடைகளை உரிய முறையில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவற்றில் துணிகள் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளையும் திறந்து அங்கு பரிசோதிக்கும் நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

மீண்டும் கோயம்பேடு சந்தையைச் சரிசெய்து அங்கு வியாபாரம் நடப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். மீண்டும் அங்கு கூட்டம் சேராமல் அரசு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

தமிழகத்தில் மளிகைப் பொருட்களுக்கு எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை. ஏற்றப்பட்ட விலை உயர்வு மீண்டும் குறைக்கப்படும். போக்குவரத்து செலவுகள் கூட்டப்பட்டதாலேயே விலை உயர்ந்தது”.

இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.