கொழும்பில் ஊரடங்கு வேளையிலும் மக்கள் நடமாட்டம்!

313 0

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவல் குறித்த அவதானத்தின் மத்தியிலும் கொழும்பு, கம்பஹா மாகாணங்கள் தவிர்ந்து நாட்டில் ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் மிகக் குறைந்த அளவிலான மக்கள் நடமாட்டமே காணப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்தும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு நகரில் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் செயற்பாடுகளுக்கு அப்பால் பொது மக்களின் அதிகளவிலான நடமாட்டங்கள் காணப்பட்டது.

கடந்த 50 தினங்களாக முழுமையான ; ஊரடங்கு கட்டுபாட்டின் ; கீழ் இருந்த புத்தளம், களுத்துறை மாவட்டங்கள் உள்ளடங்களாக நாட்டின் 23 மாவட்டங்களில் இன்று தொடக்கம் 15 மணிநேர ஊரடங்கு தளர்வுக்கு அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில் குறித்த பகுதிகளில் மக்களின் செயற்பாடுகள் மிகக் குறைவாகவே காணப்பட்டது.

அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து அனாவசிய செயற்பாடுகளில் மக்கள் வீதிக்கு இறங்குவது மிக குறைவாகவே காணப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பயணிக்கும் விதத்தில் அரச பேருந்துகள் போக்குவரது சேவைகளில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் சுகாதார அதிகாரிகள், சுகாதார அமைச்சு முன்வைத்துள்ள ஆலோசனைகளை முழுமையாக பின்பற்றிய வகையில் பேருந்துகளில் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொதுப்போக்குவரது சேவைகளில் ஈடுபடுத்தப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 50 தினங்களாக தொடர் ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள புத்தளம் மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் மிகக் குறைந்த அளவிலான மக்கள் நடமாட்டமே காணப்பட்டது.

எனினும் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் தமது பணிகளை முன்னெடுத்ததுடன் அவர்களுக்கான பொதுப்போக்குவரத்துகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டது. அத்துடன் தொடர்ச்சியாக ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்த இவ்விரு மாவட்டங்களிலும் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டினர்

கொழும்பு -கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு நீடிக்கின்ற போதிலும் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் ; கடமைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஐம்பது நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் இன்று கொழும்பில் வழமைக்கு மாறான மக்கள் கூட்டம் சகல பகுதிகளிலும் காணப்பட்டது.

ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற போதிலும் மக்களின் செயற்பாடுகள் சிலவற்றை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமையே அதற்கான காரணமாகும். அரச மற்றும் தனியார் ஊழியர்கள் அதிகளவில் கொழும்பில் பணிகளில் ஈடுபடுகின்ற காரணத்தினால் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு எந்தவித தடைகளும் இன்றி முறையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டிருந்தது. இதனால் கொழும்பு வீதிகளில் ஓரளவு வாகன போக்குவரத்துகளும் காணக்கூடியதாக இருந்தது.

அதே நேரத்தில் கொழும்பில் பல பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் நடமாடியதையும் அவதானிக்க முடிந்தது. வங்கிகள் முன்னாலும், பல்பொருள் அங்காடிகள் முன்னாலும் வரிசைகட்டி மக்கள் நின்றதுடன் வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் நோக்கத்தில் பலர் பேருந்து நிலையங்களில் பல மணிநேரம் பேருந்துகளுக்காக காத்திருந்ததையும் காண முடிந்தது.

எனினும் பொது மக்களுக்கான போக்குவரத்துகள் எதுவும் அனுமதிக்கப்படாத காரணத்தினாலும், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள காரணத்தினாலும் அவர்களை அனுமதிக்காது உரிய இடங்களுக்கே திரும்பி அனுப்பும் நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டனர்.

மேலும் கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் ; ஊரடங்கு ; நீடிக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொதுமக்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய அடையாள அட்டை இலக்கங்களின் அடிப்படையில் வெளிவேலைகளுக்கு செல்ல வேண்டும் எனவும் பொது மக்களுக்கான பொதுப்போக்குவரத்து இரண்டு வாரங்களுக்கு முன்னெடுக்கப்படாத காரணத்தினால் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.