பொதுத் தேர்தலுக்கு தடை உத்தரவு கோரும் முதல் மனு மீதான விசாரணை நாளை!

415 0

ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 2020 பொதுத்தேர்தலை இடைநிறுத்தும் வகையிலான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முதல் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளது. குறித்த நீதிபதிகள் குழாமுக்கு நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா தலைமை தாங்குவார். அத்துடன் நீதிபதிகள் குழாமில் எஸ்.துரைராஜா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடாத்த திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யக் கோரி கடந்த 2 ஆம் திகதி, சட்டத்தரணி சரித்த குணரத்னவால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது. .

அரசியலமைப்பின் ; 104 (அ ) சரத்துடன் இணைத்து வாசிக்கத்தக்கதாக 126,17 ஆம் சரத்துக்களின் அடிப்படையில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக் குழு உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர, ரத்னஜீவன் ஹூல், ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக இதுவரை 12 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.