500 தகவல் அதிகாரிகள் நியமனம்

310 0

1196285739rtiதகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்காக 500 தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தகவல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஜி.கே.எஸ்.ரவீந்திர கூறியுள்ளார்.

இது தொடர்பில் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாகவது,

அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், மாகாண சபை உள்ளுராட்சி அமைச்சு உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டத்திற்கு அமைய அரச நிறுவனமொன்றுக்காக தகவல் அதிகாரி ஒருவரும் மேன்முறையீட்டு விடயங்களுக்காக அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட உள்ளனர். நிறுவன தலைமை அதிகாரி மேன்முறையீட்டு அதிகாரியாக செயல்படுவார்.

இவ்வாறான நிறுவனத்தின் இரண்டாம் நிலை நிறைவேற்று அதிகாரி தகவல் அதிகாரியாக நியமிக்கப்படுவார். 30 அமைச்சுக்கள் மற்றும் மத்திய வடக்கு, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாவட்ட செயலகங்கள் மூன்றுக்கும் தகவல் அதிகாரிகள் நியமிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

ஏனைய நிறுவனங்களில் தகவல் அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து நியமனங்களையும் இம்மாத இறுதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரச நிர்வாகங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நியமிக்கப்படும் தகவல் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.