முள்ளிவாய்க்கால் 11 ஆண்டுகள்: பகுதி 1 கல்வியும், ஈழத்தின் இன்றைய நிலையும்- திரு நேரு ( கனடா)

394 0

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஒரு அரசியல், சமூக விடுதலைகாக மட்டுமல்ல, தமிழர் சமூகத்தின் பன்முக வளர்ச்சிக்கும், முன்னேற்த்திற்குமாக பயணித்த ஒரு இனம், இன்று எங்கிருகிறது என்பதை ஒரு மீளாய்வுக்குட்படுத்த முனைவோம்.

தமிழர் தாயகத்தில், ஒரு நிழல் ஆட்சியமைந்த காலத்தில், மக்களின் தேவைகருதிய 28 துறைசார் அங்கங்கள், தம்மை நிலைப்படுத்திப் பயணித்தன. அதில் ஒரு பகுதி தான் அரசியலே அன்றி அதுவே ஒரு இனத்தின் வாழ்வல்ல. ஒரு மக்கள் சமூகத்தின் முக்கிய வாழ்வியல் அங்கங்களில் ஒன்றான, கல்வியையே இங்கு முதலில் கவனத்தில் கொள்ளப்போகிறோம்.

கல்வியிலும் நாம் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டதன் விளைவே, 70களில் இளைஞர் போராட்டத்தின் வித்து. கல்வியில் சிறந்து விளங்கிய இனம், தரப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கல்வி உரிமை பறிக்கப்பட்டு, அதன் உயர்ச்சி, வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதையும் கடந்து தமிழர் கல்விநிலை தக்கவைக்கப் படவேண்டும், என்பதே அன்றைய முனைப்பாகவும் இருந்தது.

இந்நிலையில், ஈழத்தமிழர் விடுதலைக்காக முன்னகர்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பு, தனது அரசியல், சமூக வேலைத்திட்டங்களில், கல்வியை முதன்மையாக கொள்கிறது. அது தனது அரசியல் வேலைத்திட்டம் குறித்த ஆவணத்தில், 1983இல், கல்வி குறித்த வேலைத்திட்டத்தை பின்வருமாறு விபரிக்கிறது.

“#அரச ஒடுக்குமறையின் கொடூரத்தால் மிகவும் சீரழிவுக்கு உள்ளாகியிருப்பது எமது கல்வித்துறையாகும். ஆகவே கல்வித் துறையை வளர்த்து, விரிபுபடுத்தி, முன்னேற்றம் அடையச்செய்யும் பணிக்கு, எமது விடுதலை இயக்கம் மிகவும் முக்கியத்துவம் அளிக்கும். தமிழீழத்தின் சகல பிராந்தியங்களிலும், சர்வகலாசாலைகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களை அமைத்து, இளம் பரம்பரைக்கு விஞ்ஞான, தொழில்நுட்ப தொழில்சார்ந்த, கல்விபுகட்ட எமது இயக்கம் திட்டமிட்டிருக்கிறது. சிறுவர்களுக்கு கல்வி கட்டாயமாக்கப்படும். தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவான, நிபுணத்துவத்தையும், அறிவுத் துறைகளையும் உருவாக்கும் வகையில், புரட்சிகர கல்வித்திட்டம் ஒன்றை எமது இயக்கம் செயற்ப்படுத்தும். விஞ்ஞான உலகப்ப்பார்வையும், சமூகப் பிரக்ஞையையும், சமத்துவ உணர்வையையும் வளர்க்கும் நோக்கில், பாடத்திட்டங்கள் அமைக்கப்படும்”. என்கிறது கல்வி குறித்த அந்த வேலைத்திட்டம்.

இன்று புதிதாக தமிழ்த்தேசியம் பேசுபவர்களிலும், நாம் தான் தொடர்ச்சி என படம் காட்டுபவர்களிலும் எத்தனை பேருக்கு இது தெரியும் என்பதுவும் விந்தை தான். “கல்விக்கு எமது போராட்டம் என்றும் கவசமாக இருக்கும்” என்றும், “போரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாகிவிட்டது”, எனவும் குறிப்பிட்டார் தமிழீழத் தேசியத் தலைமை. மேலே குறித்த வேலைத்திட்டப் பார்வையையே, பின்னர் பல சிங்கள, முஸ்லீம் தலைவர்கள் மட்டுமல்ல, இன்று கோத்தபாய வரை தம் இனம் சார்ந்து பேசினர், பேசுகின்றனர்.

21ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில், தாயகத்தில் அமைந்த ஒரு நிழல் தமிழ் அரசுக்காலப்பகுதியில், 1983இல் வரிந்து கொண்ட கல்விக் கொள்கைக்கு வடிவம் கொடுத்து, அதை முன்னகர்த்த முனைந்ததை புலத்தில் உள்ள எம்மில்ப் பலர், நேரிலேயே தரிசித்து இருக்கின்றோம். அதற்கு வலுச்சேர்த்திருக்கின்றோம். சட்ட, மருத்துவ, தொழில் பயிற்சிக் கல்லூரிகள், ஆய்வு மையங்கள் அமைந்ததும், சிறுவர் கல்வி அனைவருக்கும் கட்டாயமானதும் நடந்தேறியது.

இன்று வேகமாக முன்னகரும் உலகில், கல்வி மேலும் ஒரு இனத்தின் இருப்பில் முதன்மையாகிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த, முதன்மைத்தலைவர் ஒருவர் பின்வருமாறு தனது மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். “Education is the passport to the future, for tomorrow belongs to those who prepare for it today”. “கல்வியே எதிர்காலத்திற்கான கடவுச்சீட்டு. இன்று யார் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்கிறார்களோ நாளை அவர்களுக்கானது”, என்றார்.

ஜ.நாவின் பொதுச் செயலாளராக இருந்தவரும், ஆபிரிக்க கறுப்பினத் தலைவர்களில் ஒருவருமான கோபி அன்னன் பின்வருமாறு தெரிவிக்கின்றார், “Knowledge is power. Information is liberating. Education is the premise of progress, in every society, in every family”. அதாவது “அறிவு ஒரு வலுநிலை. தகவல்கள் எங்களை மேன்மைப்படுத்துகிறன. ஒரு சமூகத்திலான ஒரு குடும்பத்திலான முன்னேற்றத்திற்கு கல்வி முதன்மையாகிறது”, என்கிறார் கோபி அன்னன்.

போட்டிக்களமாக, போராட்டகளமாக, மாறிவிட்டுள்ள இன்றைய உலகிலும் சரி, இலங்கைத் தீவிலும் சரி, தன்னை நிலைநிறுத்தி, தக்கவைத்து, முன்னகர முனையும் எவ்வினத்திற்கும், கல்வி முதன்மையாகிறது. கல்வி குறித்த பார்வையும், அதிலிலான முன்னேற்றமும் முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான கடந்த 11 ஆண்டுகளில், தமிழ் பேசும் முஸ்லீம் சமூகத்திலும், சிங்கள சமூகத்திலும் கணிசமான முன்னேற்த்தைக் கண்டுள்ளன.

ஆனால் போர் காலத்தில் கொண்டிருந்த நிலைகளைக் கூட இழந்து, மிக மோசமாக சறுக்கி, கடந்த 11 ஆண்டுகளில் ஈழத்தமிழரின் கல்விநிலை கடைநிலையை அடைந்துள்ளமை அதிர்ச்சியளிக்கிறது. இது அவ்அவ்ப்போது சிறிய பேசுபொருளாகி, பின்னர் மறைந்துவிடுகின்ற நிலைமை ஆபத்தானது.

ஈழத்தமிழினத்தை மிக மோசமான நிலைக்கு, பல தலைமுறைகள் பின்தள்ளிவிடக்கூடிய இந்நிலைமை குறித்து, ஆதாரபூர்வமான தரவுகளுடனும், ஏனைய சமூகங்கள் எத்தகைய வளர்ச்சிநிலையை சுட்டி நிற்கின்றன என்பது குறித்தும், எவையெல்லாம் உடன் நடந்தாக வேண்டும் என்பது குறித்தும், அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

திரு நேரு ( கனடா)