கடந்த 30ம் திகதி இரவு சிறிலங்கா ரீதியில் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கலவாடி சென்ற சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடந்த 30ம் திகதி இரவு ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டியினை ஹட்டன் வெளிஒயா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கலவாடி சென்று குறித்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி பழுது பார்க்கும் நிலையத்தில் கொண்டு சென்று மறைத்து வைத்துள்ளார்.
குறித்த பழுதுபார்க்கும் நிலையத்தில் பழுது பார்ப்பதற்காக கினிகத்தேன மற்றும் மஸ்கெலியா பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட முச்சக்கர வண்டிக்கு கலவாடிய முச்சக்கர வண்டியில் உள்ள உதிரிபாகங்களை கழற்றி மாற்றியுள்ளதோடு மேலும் சில உதிரிபாகங்களை உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்திற்கு விற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை உதிரிபாகங்கள் மாற்றப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய உதிரிப்பாகங்களையும் ஹட்டன் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

