தமிழர் கல்வி தொடர்பில் சமூக அக்கறை அவசியம் – வி.ஜனகன்

256 0

கல்வியில் தமிழர் தரப்பு பின்னோக்கிச் செல்வது தொடர்பாகச் சமூக ரீதியான அக்கறை வலுப்பெற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான வி.ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.

வெளிவந்திருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்துத் தமிழ் பிரதேசங்களும் மாவட்ட ரீதியில் பின்னோக்கி இருப்பது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே கலாநிதி ஜனகன், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவையாவன

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்துத் தமிழ் பிரதேசங்களும் மாவட்ட ரீதியில் பின்னோக்கி இருப்பது தொடர்பாகத் தமிழ் மக்கள், சமூக அடிப்படையில் சிந்திக்க வேண்டும். 2019ஆம் ஆண்டு பெறுபேறுகளைகாட்டிலும் யுத்தம் நடைபெற்ற 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு பெறுபேறுகளில் தமிழ் மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களே மாவட்ட ரீதியில் முன்னிலையில் இருந்தன. உதாரணமாக யாழ். மாவட்டம், வவுனியா மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் என்பன மாவட்ட ரீதியில் பத்து இடங்களுக்குள் தங்களை முன்னிலைப்படுத்தின.

கொடூர யுத்தகாலத்திலும் கல்விக்கு முக்கியம் வழங்கிய தமிழர் தரப்பு, இன்று கல்வியில் மாவட்ட ரீதியில் தொடர்ந்தும் பின்தள்ளப்பட்டு வருகின்றனர். மேலும் யுத்த காலத்தில் ஆண்டுக்கு பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் யாழ். மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். ஆனால், யுத்தம் முடிந்து மீள் குடியேற்றம் நடந்த பிறகு 8,500 மாணவர்கள் மாத்திரமே இப் பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். இன்று பல மாணவர்கள் இப் பரீட்சைக்குத் தோற்றுவது குறைந்துவருவதே இதற்குக் காரணமாகின்றது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்கள் கல்வியில் அதிகூடிய பெறு பேறுகளை வழங்கிவந்த காரணத்தால் தமிழர் தரப்பு கல்வித்துறையில் சிறந்து விளங்கியது. அதற்கான பெருமையும் இன்றுவரை எம் இனத்துக்கு இருந்துவருகின்றது. ஆனால், இன்றைய பின் தள்ளப்பட்ட நிலைக்கு வெறுமனவே பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் குறை சொல்வதைவிட இந்தப் பிரச்சினையை சமூக ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.

தமிழ் சமூகம் இதனைத் தங்களுடைய பிரச்சினையாகக் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும். முக்கியமாக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் (Tamil diaspora) இதனை முறையாகப் புரிந்துகொண்டு, தமிழர் வாழும் பகுதிகளில் இளைஞர்களுக்கு வெளிநாட்டுப் பணம் மற்றும் வெளிநாட்டு மோகம் போன்றவற்றை வழங்குவதைக் குறைந்துக்கொள்ள வேண்டும். கல்வியில் எமது இளம் சமுதாயம் சிறந்து விளங்க முறையான செயற்றிட்டங்களைச் செயற்படுத்த வேண்டும். கல்வி என்பது தமிழர்களின் பெருமை என்பதை மீண்டும் நிலைநிறுத்த, இது எமது சமூகக் கடமை என்பதை உணர்ந்து சமூகமாகச் செயற்பட வேண்டும் என்று, ஜனகன் மேலும் தெரிவித்துள்ளார்.