இனக்குரோதங்களைத் தூண்டும் சிங்களவரின் செயலுக்கு முற்றுப்புள்ளி தேவை-குமரகுருபரன்

293 0

kumarakuruparanஇனக் குரோதங்களை தூண்டுவதற்காக வெற்று காணிகளிலும், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகள் அகற்றப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனநாயக மக்கள் காங்கிரஸின் செயலாளரும், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுருபரனினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் பௌத்த மக்கள் வாழாத இடங்களிலும், வெற்று காணிகளிலும் திட்டமிட்ட வகையில் புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லிணக்கத்தை விரும்பாத பௌத்த அடிப்படைவாதிகளே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மட்டக்களப்பு – மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஐந்து அடி உயரத்திலான புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளதாகவும், இது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சிங்கள இனவாதிகளினால் விடுக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு எச்சரிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்த துறவிகள் ஏனைய மதங்களை தூசிப்பதும், வன்முறை கலாசாரத்தை வெளிக்காட்டுவதும் உன்னதமான பௌத்த துறவி அஹிம்சா மூர்த்தியான புத்தருக்கும் பௌத்தத்திற்கும் செய்யும் துரோகம் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது செய்யப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் குறித்து கட்சியின் தலைவர் பிரபா கணேசனும், தானும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.