சிறிலங்காவில் நாளொன்றுக்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் – ஐ.தே.க.

282 0

சிறிலங்காவில் முப்படையினர், பொலிஸார், வைத்தியர்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், நாளொன்றுக்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்,

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அசாதாரண காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள், வைத்தியர்கள், பொலிஸார், முப்படையினர் என அனைவருக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது கதைத்துக் கொண்டிக்கும் காலமன்றி, சேவை செய்யக்கூடிய காலமாகவே கருதப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்த முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஒரு நாளில் மேற்கொள்ப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்துமாறு அன்றே கூறியிருந்தார். நான் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தபோதும், நடமாடும் சேவைகள் ஊடாக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தோம். அன்று நாம் கூறியதுதான் இன்று தேவைப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக மட்டுமே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மக்களும் பொறுப்புடன் இந்தக் காலத்தில் செயற்பட வேண்டும். அரசியல்பேதங்கள், இன- மத பேதங்களை கடந்தும் மறந்தும்தான் நாம் இதற்கு முகம் கொடுக்க வேண்டும்.

இன்று கடற்படையினருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, முப்படையினர், பொலிஸார், வைத்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

குறைந்தது 400 பி.சி.ஆர். பரிசோதனைகயேனும் நாளொன்றுக்கு மேற்கொள்ள வேண்டும். அதேநேரம், கடந்த ஒன்றரை மாதங்களாக சிறிலங்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்தும் சிறிலங்காவி அரசாங்கம் சிந்தித்து செயற்பட வேண்டும். இதற்காக எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கத் தயாராகவே இருக்கிறோம். நாடாளுமன்றைக் கூட்டுவது தொடர்பாகவும் இன்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றைக் கூட்டுவதும், பொதுத் தேர்தலை நடத்துவதும் இந்த நேரத்தில் முக்கியமில்லை. ஆனால், அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் நாம் நாடாளுமன்றைக் கூட்டுமாறு கேட்கிறோம்.

நாடாளுமன்றம் தேவையில்லை என்றால், அரசாங்கமும் தேவையில்லை என்ற அர்த்தம்தான் வெளிவருகிறது. இதுதொடர்பாகவும் சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என கூறினார்.