பொலிஸாரை அச்சுறுத்தியமை தொடர்பில் வித்தியா கொலை குற்றவாளிகளிடம் தனியான விசாரணை

290 0

M

வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களினால் பொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக சம்மந்தப்பட்ட 9 சந்தேக நபர்களிடமும் தனித்தனியான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ் வாக்குமூலங்கள் அனைத்தும் நீதவான் வை.எம்.எம்.ரியாலின் உத்தரவுக்க அமைய ஒரே நாளில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கடத்திச் செல்லப்பட்டு குழு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலில் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதன்படி குறித்த வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட 9 சந்தேக நபர்களும், வழக்கு நடவடிக்கைகள் முடிந்து நீதிமன்றத்தினை விட்டு வெளியேறிய போது, தாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றும், தங்களை ஊர்காவற்றுறை பொலிஸார் தேவையில்லாமல் கைது செய்துள்ளனர் என்றும், தங்களை கைது செய்த கோபி என்று அழைக்கப்படும் பொலிஸாரை கொலை செய்வோம் என்றும் பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
இவ்வாறு பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தனியான வழங்கு ஒன்று ஊர்காவற்றுறை பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கும், வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான வழக்கும் நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
முதலில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது ஊர்காவற்றுறை பொலிஸார் சார்பில், இவ்வழக்குத் எழுவதற்கான சம்பவம் நடைபெற்ற வேளை இங்கிருந்த சீரற்ற நிலமைகள் தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாக வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தற்போது குறித்த சந்தேக நபர்களிடம் வாக்கு மூலத்தினை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியினை மன்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை விண்ணப்பம் ஒன்றினை நீதவான் முன்னிலையில் சமர்ப்பித்திருந்தனர்.
இவ்விண்ணப்பம் தொடர்பாக ஆராய்ந்த நீதவான் அவர்களிடம் வாக்குமூலத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியினை வழங்கியதுடன், வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான வழக்கு விசாரணைகளுக்காக அவர்கள் இன்று (நேற்று) மன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதால், இன்று (நேற்று) நீதிமன்ற வாளாகத்திற்குள் வைத்தே 9 சந்தேக நபர்களிடமும் வாக்கு மூலத்தினை பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை பொலிஸாரை நீதவான் வை.எம்.எம்.ரியால் பணித்திருந்தார்.