மே மாதம் நடுப்பகுதியில் கரோனா தொற்று அதிகரிக்கும்: இம்ரான்கான் கவலை

289 0

பாகிஸ்தானில் மே மாதம் நடுப்பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, “பாகிஸ்தானில் மே 15 முதல் மே 20 ஆம் தேதி வரை கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். நாங்கள் முன்னரே கணித்தது போல எப்ரல் 15 ஆம் தேதி முதல் மருத்துவமனைகள் அழுத்தத்திற்கு ஆளாகும்.

ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் பாகிஸ்தானில் 50,000 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்படலாம். எனினும் மார்ச் மாதம் கொண்டு வந்த ஊரடங்கு மூலம் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் நாட்டின் பொருளாதாரம், தினக் கூலிகள், வேலையிழப்புகள், பிரச்சினைகள் கவலை அளிப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். பாகிஸ்தானில் கரோனா தொற்றுக்கு இதுவரை 7,638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 143 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுக்கு 23,32,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,60,767 பேர் பலியான நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.