அரச பேருந்தில் மதுபானம் கடத்திய 4 பேர் கைது

323 0

ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட வேளையில் அலுவலக சேவைக்காக பயன்படுத்தப்பட்ட வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் நான்கு சந்தேக நபர்கள் நேற்று இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வாழைச்சேனை போக்குவரத்து சபையின் பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் கும்புறுமூலை இராணுவம் மற்றும் பொலிஸ் சோதனை சாவடியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இருபத்தி ஒன்பது (29) மதுபான போத்தல்களுடன், நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே சட்டவிரோதமான முறையில் வாழைச்சேனை போக்குவரத்து சபையின் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்கள், சாலை முகாமையாளர், வாகன சாரதி, நடந்துனர், பயணி ஒருவருமாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்கள் கொண்டு செல்லப்படுகின்றமை தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.