ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

269 0

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தவாறு, மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது பெரும்பாலான மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

முன்னதாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்காக எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில் போலீசார் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி வெளியே வருபவர்களை ஆலோசனை கூறி தேவை இல்லாமல் வெளியில் சுற்றித் திரிவதை தடுக்க வேண்டும். வெளியில் வரும் பொதுமக்களுக்கு தண்டனைகள் என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது. அத்தியாவசிய தேவைக்கு வருபவர்களை தடை செய்யக்கூடாது. ஊரடங்கின் அவசியம் குறித்து எடுத்துக் கூறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.