கடற் தொழிலாளர்களை அடித்தும் கடித்தும் காயப்படுத்திய கடற்படையினர்

277 0

பூநகரியில் கடற் தொழிலாளர்களை அடித்தும் கடித்தும் காயப்படுத்திய கடற்படையினர்.

கிளிநொச்சி பூநகரி கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சகோதரர்கள் கடற்படையினரின்  தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

ரோர்ச் லைட்டினால் தாக்கியதுடன்,  அவர்களை கடித்தும் காயப்படுத்தி உள்ளனர்

கடந்த 7ம் திகதி இரவு 8 மணிக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் காயமடைந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவன் ஆவார்.

ஊரடங்கு வேலையிலும் கடற்றொழிலில் ஈடுபடுவது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முறைப்படியான அனுமதியுடன் சகோதரர்கள் இருவர் சம்பவ தினத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

முழங்கால் அளவு நீரில் அட்டை பிடித்துக் கொண்டிருந்த போது, இரவு 8 மணியளவில் கடற்படையினர் அங்கு வந்து, தங்கள்  மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .

இதில் சகோதரர்களான பத்திநாதன் இன்பராஜ் (28), பத்திநாதன் ஜோர்ஜ் யூலியன் (25) ஆகியோர் காயமடைந்தனர்.

ஜோர்ஜ் யூலியன் யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவன் ஆவார்.  அவருக்கு கடற்படை சிப்பாய் ஒருவர் தலையில் ரோர்ச் லைட்டினால் தாக்கியுள்ளார். பின்னர் அவரை கடற்படைச் சிப்பாய் கடித்துக் காயப்படுத்தியுள்ளார்.

அன்றைய தினம் இரவே வேரவில் வைத்தியசாலைக்கு சென்று காயங்களிற்கு மருந்து கட்டியுள்ளனர்.

பின்னர் இன்றையதினம் (11) கடிகாயத்திற்கு ஊசி போட  சென்றுள்ளனர். இதன்போது, வைத்தியர் நடந்த விபரத்தை கேட்டுள்ளார்.

எனினும், சகோதரர்கள் முதலில் அச்சத்தினால் நடந்ததை கூற மறுத்துள்ளனர். பின்னர் வைத்தியர் தீவிரமாக விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.

இதனை அடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் கடி காயத்துக்கு உள்ளானவர்  கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பூநகரி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.