மட்டக்களப்பில் தமிழ் தேசிய மாணவர் பேரவை அங்குரார்ப்பணம்(காணொளி)

392 0

batticcaloசகல திறமைகளையும் கொண்டதாக வடகிழக்கில் உள்ள மாணவர்களை சர்வதேச தரத்தில் வளப்படுத்திக்கொள்ளும் வகையில் மாற்றவேண்டிய தேவையுள்ளதாக தமிழ் தேசிய மாணவர் பேரவையின் ஸ்தாபக தலைவர் ஆறுமுகம் ஜோன்சன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் தமிழ் தேசிய மாணவர் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு குருமண்வெளியில் நடைபெற்றது.

வடகிழக்கு மாகாணத்தில் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காக கொண்டு தமிழ் தேசிய மாணவர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு வடக்கில் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிழக்கில் அதன் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்துவாழும் உறவுகள், மற்றும் நலன் விரும்பிகளின் உதவிகளைக்கொண்டு வினைத்திறன் மிக்க மாணவர் சமுதாயத்தினை உருவாக்கும் வகையில் இந்த பேரவை செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.

இதற்கமைய கிழக்கு மாகாணத்திற்கான இடைக்கால நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. தலைவராக சி.கோகுல்ராஜ் தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக செ.டிலோஜன்,பொருளாளராக வே.லோகுராஜன் தெரிவுசெய்யப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக தெ.புவிராஜ்,அம்பாறை மாவட்ட இணைப்பாளராக தி.விஜய் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன் எட்டு நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

கடந்த கால யுத்தத்தினால் கல்வி,கலை,கலாசாரங்களை இழந்த சமூகத்தின் நிலையினை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கையினை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வீழ்ச்சியடைந்து செல்லும் கல்வி நிலையை மேம்படுத்தும் வகையில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்த விரிவாக ஆராயப்பட்டது.