ஊழல் வழக்கில் ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை

234 0

ஈகுவடாரில் ஊழல் வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில் ஈகுவடார் முன்னாள் அதிபர் ரபேல் கொரியாவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரில் 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தவர் ரபேல் கொரியா. இவர் தனது பதவி காலத்தின் போது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பெரு நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தத்தை ஒதுக்கியதாகவும், அதற்கு ஈடாக அந்த நிறுவனங்களிடம் இருந்து 7.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.57 கோடி) லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக ரபேல் கொரியா மற்றும் அவரது பதவி காலத்தில் துணை அதிபராக இருந்த ஜார்ஜ் கிளாஸ் உள்ளிட்ட 19 பேர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டு, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. ஆனால் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும், இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் கூறி வந்த ரபேல் கொரியா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈக்குவடாரில் இருந்து வெளியேறி பெல்ஜியத்தில் தஞ்சம் அடைந்தார்.
இந்த நிலையில் முன்னாள் அதிபர் ரபேல் கொரியா உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. இதில் ரபேல் கொரியா உள்ளிட்ட 19 பேர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, ரபேல் கொரியாவுக்கு 8 ஆண்டுகளும், ஜார்ஜ் கிளாஸ் உள்ளிட்ட 18 பேருக்கு தலா 6 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் ரபேல் கெரியா உள்ளிட்ட 19 பேரும் 25 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.