தங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள நிறுவனத்திடமிருந்தே மருத்துவ உபகரணங்களை பெற்ற அமெரிக்கா

218 0

தங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள ரஷிய நிறுவனத்திடமிருந்து வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா பெற்றுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வந்தது.
இதையடுத்து, கொரோனா தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் அமெரிக்காவுக்கு உதவ ரஷிய அதிபர் புதின் முன்வந்தார்.
இதற்காக, செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் மிகப்பெரிய சரக்கு விமான ரஷியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நியூயார்க் வந்தடைந்த ரஷிய விமானத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து மருத்துவ உபகரணங்களும் அமெரிக்காவின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரஷியா அமெரிக்காவுக்கு அனுப்பிய மருத்துவ உபகரணங்கள்
இதற்கிடையில், 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் உக்ரேன், கிர்மியா விவகாரங்களின் போது அமெரிக்கா அரசு ரஷியா மீது பல்வேறு பொருளாதாரத்தடைகளை விதித்தது.
ரஷியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் தடை விதித்தது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளையும் ரஷிய நிறுவனங்களோடு வர்த்தகம் செய்யவேண்டாம் என அறிவுறுத்தியது.
தங்கள் விதித்த தடைகளை மீறி ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் பொருளாதாரத்தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்கா ரஷிய நிறுவனங்கள் மீது விதித்த வர்த்தகத்தடைகள் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
ரஷிய அதிபர் புதின்
இந்நிலையில், நியூயார்க் நகருக்கு ரஷியா அனுப்பிய மருத்துவ உபகரணங்களில் வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவியை அமெரிக்காவின் வர்த்தகத்தடை பட்டியிலில் உள்ள நிறுவனத்தின் தயாரிப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
யூபிசெட் என்ற அந்த நிறுவனத்தை கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா தனது வர்தக தடைப்பட்டியலில் வைத்துள்ளது. ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் நிலையில் ரஷிய அதிபர் புதின் அமெரிக்காவுக்கு வழங்கிய மருத்துவ உபகரணங்களில் செயற்கை சுவாசக்கருவி யூபிசெட் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்படத்தக்கது.