கொரோனாவால் உயிரிழந்த 2 ஆவது நபருடன் தொடர்பு : யாழில் 130 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

228 0

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவருடன் நீர்கொழும்பு வாசியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 குடும்பங்கள் உள்ளடங்கலான 130 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நபருடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ஐந்து சந்தி மற்றும் நாவாந்துறைப் பகுதியினைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பினைச் சேர்ந்த 64 வயதான நபர் நேற்று மாலை கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்திருந்தார். குறித்த நபர் கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு சென்ற அவர் 8 ஆம் திகதி தனது சகோதரனின் பிள்ளையின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மறுநாள் 9 ஆம் திகதி மீண்டும் நீர்கொழும்பிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்ததை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்றும் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 130 பேருடைய பெயர் விபரங்கள் ;திரட்டப்பட்டு அவர்களை தேடும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி ஐந்து சந்தி மற்றும் நாவாந்துறைப் பகுதி பொலிஸ், இராணுவம் மற்றும் சுகாதாரத்துறையினரால் முற்றுகையிடப்பட்டது.

அங்கு திருமணம் நடந்த பகுதி, மணமகன் மற்றும் மணமகள் வீடுகள் முற்றுகையிடப்பட்டன. மேலும் குறித்த நபர் தங்கியிருந்த இடமும் முற்றுகையிடப்பட்டன.

குறிப்பாக கொரோனாவால் உயிரிழந்த நபருடன் தொடர்புபட்ட 130 நபர்களுடைய பெயர் விபரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்தேடுதல் நடவடிக்கையில், ஜே.86 கிராம சேவகர் பிரிவில் 14 குடும்பங்கள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டன.

அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான உணவுகள் நேற்று வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கான உலர் உணவுகளும் வழங்கப்பட்டன.