கொரோனா பரவுவதை தடுக்க பனை ஓலையில் முக கவசம் செய்து அணிந்த தொழிலாளர்கள்

306 0

கொரோனா பரவுவதை தடுக்க பனை ஓலையில் செய்யப்பட்ட முககவசம் அணிந்து தொழிலாளர்கள் வேலை செய்தனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பால், காய்கறி, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட் களை வாங்க வருபவர்கள் முககவசம் அணிந்து வெளியில் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் முககவசத்தின் தேவை அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் ஏராளமான பனையேறும் தொழிலாளர்கள் உள்ளனர்.

தற்போது கோடை காலத்தில் பதனீர் சீசன் தொடங்கியதால், கருப்புக்கட்டி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இதனால் ஒருசில குடும்பத்தினரே முககவசம் அணிந்தவாறு, வெளியில் சென்று கருப்புக்கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள், பனை ஓலையில் முககவசத்தை தயார் செய்து, அதனை பனை ஓலை மட்டை நாரால் இணைத்து, முகத்தில் அணிந்துள்ளனர்.

குளத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பனையேறும் தொழிலாளியான குணசேகரன் பனை ஓலையில் முககவசத்தை தயாரித்து அணிந்துகொண்டு பனையேறும் தொழிலில் ஈடுபடுகிறார். அவருக்கு உதவியாக மனைவி முருகலட்சுமியும் பனை ஓலையில் செய்யப்பட்ட முககவசம் அணிந்தவாறே பதனீரை காய்ச்சி கருப்புக்கட்டி தயாரிக்கிறார்.

மேலும் அவர்கள் இதுபோன்று முககவசத்தை தயாரித்து மற்ற தொழிலாளர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இலவசமாக வழங்குகின்றனர். இதுகுறித்து பனை தொழிலாளர்கள் கூறுகையில், ‘பனை ஓலையில் செய்யப்பட்ட முககவசம் அணியும்போது கோடையிலும் குளிர்ச்சியாக உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் போன்ற நச்சு கிருமியில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்’ என்றனர்.