அமெரிக்காவில் இருக்க அனுமதி வேண்டும்: ஹெச்1பி விசாதாரர்கள் கோரிக்கை

451 0

கரோனா வைரஸ் கோரத்தாண்டவத்தினால் அமெரிக்காவில் பெரிய அளவில் வேலையிழ்ப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஹெச்1பி விசாதாரர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியர்கள் அமெரிக்கா செல்ல பெரிய அளவில் நாடுவது ஹெச்1பி விசாதான்.

இவர்கள் வேலையின்மைக் காலக்கட்டத்தில் 60 நாட்கள் அங்கு கூடுதலாக இருக்க அவகாசம் உண்டு, இதனை 180 நாட்களாக நீட்டிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஹெச்1பி விசா என்பது குடியேற்ற விசா அல்ல, மாறாக அயல்நாட்டு பணியாளர்களை அங்கு வேலையிலமர்த்த அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்1பி விசாகக்ளை கோருகின்றன. இந்த விசாக்கள் மூலம்தான் ஆயிரக்கணக்கான சீனர்கள், இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர்.

தற்போதைய விதிகளின் படி ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள், தங்கள் வேலையை அமெரிக்காவில் இழந்தால் குடும்பத்துடன் கூடுதலாக 60 நாட்கள் வரை தங்க அனுமதியுண்டு.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அமெரிக்கா பெரிய லாக்-டவுனில் இருப்பதால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் பெரும் சரிவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல வேலையிழப்புகள் ஏற்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.

மார்ச் 21 வரை சுமார் 3 கோடியே 30 லட்சம் அமெரிக்கர்கள் தொடக்கக் கட்ட வேலையின்மை நிலவரங்களைப் பதிவு செய்துள்ளனர். 4 கோடியே 70 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் நிலை உள்ளது.

இதில் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு வேலையின்மைக்கான அரசின் சலுகைகள் எதுவும் கிடைக்காது, இவர்கள் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை சோஷியல் செக்யூரிட்டி என்று பிடித்துக் கொள்ளப்பட்டாலும் இந்தத் தொகையை ஹெச்1பி விசாதாரர்கள் கோர முடியாது.

இதுவரை 180 நாட்கள் கூடுதலாக கூடுதல் தங்கும் கோரிக்கைக்கு 20,000 ஹெச்1பி விசாதாரர்கள் கையெழுத்திட்டுள்ளனர், 1 லட்சம் கையெழுத்துக்கள் இருந்தால் வெள்ளை மாளிகையிலிருந்து பதில் கிடைக்கும்.

இப்போது வெளிநாடுகளிலிருந்து இந்திய வருவதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தங்கல் நீட்டிப்பு கோருகின்றனர்.