2 மாதத்திற்கு வாடகை வசூலிப்பதை வீடு, கடை உரிமையாளர்கள் தவிர்க்க முன்வர வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 31) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு கரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்டெடுக்க பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகிறது. கரோனா பாதிப்பை சமாளிக்க நிவாரண உதவிகள் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
கரோனாவால் தமிழகத்திலும் சிறு, குறு தொழில் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஜவுளித் தொழில் நடைபெறாமல் துணி நெய்பவர்களுக்கு வேலை இல்லாமல் இத்தொழில் சார்ந்த கடைகளும் மூடப்பட்டுள்ளன.
அரசின் 144 தடை உத்தரவுக்கு ஏற்ப தொழில் செய்பவர்களும் அரசுக்கு ஆதரவளித்து உதவிக்கரமாக செயல்படுகின்ற வேளையில் வருமானம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாத வாடகை செலுத்துவது இயலாத காரியம். அதாவது, தொழிலாளர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட சாதாரண மக்களிடம் தற்போதைய சூழலில் குடும்பத்திற்கே செலவு செய்வதற்கு போதிய பொருளாதாரம் இல்லை.
கரோனா பாதிப்பால் தான் இத்தகைய அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் இதனை சமாளிக்க அரசு மட்டுமே உதவிகள் செய்வது போதாது. வசதி படைத்தவர்கள், வீடு, கடை, கட்டிடம் போன்றவற்றை வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளர்கள் என பல தரப்பினரும் தானாக முன்வந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வது தான் சிறப்பானது.
எனவே, வீடு, கடை, கட்டிடம் போன்றவற்றை வாடகைக்கு விட்டிருப்போர் 2 மாதத்திற்கு வாடகையை கேட்காமல் இருப்பதற்காக, வாடகைக்கு இருப்போர் வாடகையை கொடுக்க முன்வந்தால் வாங்கிக்கொள்ளலாம் என்பதற்காக தமிழக அரசும் முயற்சிகள் மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மேலும், உரிமையாளர்கள் குறைந்தபட்சம் 2 மாதத்திற்காவது மாத வாடகை வேண்டாம் என்று கூறி வாடகை வாங்காமல் இருந்தால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பயனளிக்கும்.
குறிப்பாக, உரிமையாளர்கள் தங்களது வீடு, கடை, கட்டிடம் போன்றவற்றுக்காக வங்கியில் கடன் வாங்கியிருந்தாலும் அதற்கான மாத தவணையை கட்ட மத்திய அரசு தற்போது விலக்கு அளித்திருப்பது கவனத்திற்குரியது.
எனவே, கரோனாவின் பாதிப்பிலிருந்து தமிழக மக்களை மீட்டெடுக்க அரசு உதவிகள் செய்வதோடு, பொதுமக்களில் பலர் உதவிகள் செய்ய முன் வந்திருப்பது ஆதரவளிக்கிறது என்றாலும் கூட இன்னும் கூடுதலான உதவிகள் தேவைப்படுவதால் அனைத்து தரப்பினரும் உதவிகள் செய்ய முன்வர வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

