கொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.

816 0

சிறீலங்காவின் எந்தச் சட்டமும் எந்தத் தீர்ப்பும் தமிழருக்கு நீதியை வழங்காதென்பதின் ஆகப்பிந்திய எடுத்துக்காட்டாக மிருசுவில் படுகொலையாளனான சுனில் ரத்நாயக்காவின் விடுதலை சுட்டிநிற்கின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்டதொரு முன்னேற்றகரமான நீதி நடவடிக்கையாகக் கொள்ளப்பட்ட மிருசுவிலில் 20.12.2000ஆம் ஆண்டு குழந்தை மற்றும் பராயமடையாத சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரைக் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த படையினர்கள் இனங்கானப்பட்டு 2015 விசாரணைக்கெடுக்கப்பட்டு போதிய ஆதாரங்கள் இல்லையென்று நான்குபேரை விடுதலை செய்த சிறீலங்காவின் நீதித்துறை சுனில் ரத்னாயக்கா என்ற படுகொலையாளனுக்கு சாவொறுப்புத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

தமிழினத்துக்குப் பாடமெடுக்கும் இந்த உலகும் அனைத்துலக அரசுகளும் அரசறிவியலாளர்களும் அறிந்துகொள்ளப்படவேண்டிய விடயமாக இருப்பது சிறீலங்கா அரசின் நீதித்துறையும் அதன் அரசுப்பொறியும் ஒரு காலமும் தமிழினத்துக்கான நீதியை வழங்காதென்பதோடு, அரசுப்பொறி மட்டுமல்ல சிங்கள பொளத்த பீடங்கள் முதல் சிங்களத்தின் வலையமைப்புகள் வரை தமிழினத்துக்கான நீதியை மறுப்பதே கொள்கையாகக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்தகொள்ளுதலே முதற்தேவையாகும் என்பதைத் தமிழினம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இந்தச் சூழலமைவை ஏற்றுக்கொள்ளவோ அல்லது கருத்திற்கொள்ளவோ தயாராய் இல்லாதவர்களுக்கு ஒரு வாய்ப்பினைச் சிறீலங்கா அரசுத்தலைவரான கோத்தபாய ராயபக்ச படுகொலையாளனும் சாவொறுப்புத் தண்டனைக்குரியவனுமான சுனில் ரத்நாயக்காவைப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ததன் வாயிலாகக் கொடுத்துள்ளது என்பதே மெய்நிலை.

வெறுமனே இந்த உலகமும் மனிதஉரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கியநாடுகள் சபை போன்றனவும் அறிக்கையிடுவதை விடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதே இன்றைய தேவை. அதேவேளை தமிழினத்தின் குருதியில் தமது நலன்களைத் தேடும் உலகநாடுகள்ளூ குறிப்பாக அமெரிக்கசார்பு மேற்குநாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், சீனா, இந்தியா போன்ற நாடுகள் தமிழினத்துக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதே நீங்கள் அடிக்கடி உதிர்க்கும் மனிதஉரிமையைக் காக்கும் வழியாக மட்டுமன்றித் திட்டமிட்ட இனவழிப்பைத் தடுக்கும் வழியுமாகும்.

பெரும்வலி சுமந்துநிற்கும் தமிழினத்தின் இழப்பின் வலியைப் புரிந்துகொள்ள முடியாதவர்களா(?) நீங்கள் என்று உங்களைப் பார்த்து வினாத் தொடுப்பதை நீங்கள் நிராகரித்துவிட்டு நகர்வதானதுள, உங்கள் மீதும், உலகின் நீதியமைப்புகள் மீதும் நம்பிகையீனத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். தொடர்ந்தும் தமிழினத்தை ஏமாற்றாது இனப்படுகொலை செய்யும் சிறீலங்காவோடு தமிழினம் சேர்ந்து வாழ்தல் எந்தவொரு காலத்திலும் சாத்தியப்படாதென்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை உறுதிப்படுத்த வேண்டியதே நீதியின்பாற்பட்ட உலகின் முடிவாக இருக்கவேண்டுமெனத் தமிழினம் யதார்த்தபூர்வமாக எதிர்பார்ப்பது நியாயமானதே.

இந்த எதிர்பார்ப்பை நிறைவுசெய்யக் கோரித் தமிழினம் கடந்த பல தசாப்தங்களாக உலகிடம் கோரிவருகிறன்து. 2008ஆம் ஆண்டில் மிகப்பெரும் இனவழிப்பினுள் அகப்பட்டுத் தமது எதிர்காலம் வினாக்குறியாகி அழிவுக்குள்ளாகப்போகிறதென்று அழுது குளறிக் கதறிக் கதறிக் கோரிக்கைவிடுத்தபோதும், சிங்களம் வெளியேறு என்றவுடன் சாட்சியமற்ற இனப்படுகொலைக்கு மறைமுக ஒத்துழைப்பை வழங்குவதற்கு நிகராகக் கையறுநிலையில் விட்டு வெளியேறிய ஐக்கியநாடுகள் சபையின் செயற்பாடென்பது தமிழின வரலாற்றில் ஒரு கறுத்தப்புள்ளியாக என்றும் மறையாது நிலைத்து நிற்கிறது என்பதை இந்த வேளையில் நினைவூட்ட விரும்புகின்றோம்.

சிறீலங்கா அரசால் நீதிமறுக்கபட்டுவரும் தமிழினத்துக்காக இனியென்றாலும் இந்த உலக குமுகாயமும், அரசுகளும் சிறீலங்கா அரசை மனிதஉரிமை அவையிலே வைத்து அழகுபார்ப்பதையும் ஆதரவளிப்பதையும் நிறுத்துவதோடு, காலதாமதம் செய்யாது சிறீலங்கா இனவழிப்பாளர்களை மனித உரிமை அவையானது பாதுகாப்புச்சபைக்குக் கையளித்து அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றிலே நிறுத்துவதூடாக ஒடுக்குமுறை மற்றும் இனவழிப்பு போன்றவற்றுக்குள்ளாகும் உலக மாந்தருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையை இன்றே தொடங்குவதே சாலச்சிறந்தது.

வில்வராசா பிரசாந்(5), வில்வராசா பிரதீபன்(15), சின்னையா வில்வராசா(41), ஞானச்சந்திரன் சாந்தன்,கதிரன் ஞானச்சந்திரன், குணபாலன் ரவீந்திரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம்(21), நடேசு ஜெயச்சந்திரன் ஆகியோர் 19.12.2000ஆம் நாளன்று தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற அப்பாவிப் பொதுமக்களான மேற்கூறியவர்களைப் பிடித்துக் கொண்டுசென்று கொடும் சித்திரவதைகளின் பின்னர் 20.12.2000ஆம் நாளன்று 5வயதுக் குழந்தை மற்றும் மூன்று பராயமடையாத சிறுவர்களுட்பட எட்டுப்பேரையும் தமிழர்கள் என்ற ஒரே கரணியத்துக்காகக் (கிறீஸ்) கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் கொலை செய்து மலக்குழியிலே எறிந்த இனப்படுகொலையாளனான சுனில் ரத்நாயக்காவை அரசுத் தலவைரான கோத்தபாய ராசபக்ச தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்ததன் ஊடாகச் சிங்களதேசம் தமிழினத்துக்கு மட்டுமன்றி உலகுக்கும் ஒரு காத்திரமான செய்தியைச் சொல்லியுள்ளதையும் கருத்திற் கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் உலகு எடுக்கிறதோ அல்லது தனது நலன்களைச் சுற்றி நகர்கிறதோ என்பதைக் காலம்தான் பதிவுசெய்யும். ஆனால் தமிழினம் இதனை ஒரு காத்திரமான நிலையை நோக்கி நகர்த்திவிடக் கூடியதொரு வாய்ப்பாகப் பயன்படுத்துமா?

மிருசுவில் படுகொலையும் அதன் போக்கும்:

•மிருசுவில் படுகொலை „ என்று அழைக்கப்படும் இப்படுகொலையானது சிங்கள அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்டது.

•19.12.2000ஆம் நாளன்று தமது வாழிடங்களைப் பார்க்கச் சென்றபோது பிடித்துக் கொடுமையான சித்திரவதை துன்புறுத்தல் மேற்கொண்டமை.

•20.12.2000ஆம் நாளன்று கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் படுகொலைசெய்தமை.

•இப்படுகொலைகள் நடைபெற்ற காலப்பகுதியில் சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் அரசுத் தலைவராக இருந்தார்.

•இப்படுகொலையில் இருந்து தப்பிய ஒருவரால் இந்தக்கொலைகள் வெளியே தெரிய வந்தது.

•24.12.2000 ஆம் நாளன்று மலகூடக்குழியில் இருந்து உடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

•27.11.2002இல் சட்டமா அதிபரால் 5சிறீலங்காப் படையினர் மீதும் 19குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

•25.06.2015அன்று சிறப்புத் தீர்ப்பாய விசாரணையில் சாவொறுப்புத் தண்டணை விதித்துத் தீர்ப்பு.

•26.03.2020ஆம் நாள் அரசுத் தலைவரான கோத்தபாய ராசபக்சவினால் பொதுமன்னிப்பளித்து மிருசுவில் படுகொலையாளி விடுதலை.