பாடசாலை மாணவி துஸ்பிரயோக வழக்கில் ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

466 0

Jail 3_CIதென்மராட்சி பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் மற்றும் அதனை மறைக்க முயன்றவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவு இட்டுள்ளார்.
தென்மராட்சி பகுதியில் உள்ள பாடசாலை மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகவும் அதனை பாடசாலை அதிபர் , மூன்று ஆசிரியைகள் உட்பட எட்டு பேர் மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஒன்பது பேர் கொடிகாமம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு இட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியைகள் மூவரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்திருந்தார்.  குறித்த வழக்கு இன்றைய தினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் , விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள ஐந்து சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை ஆனார்கள். அதன் போது 6ம் ,7ம் , 8ம் , 9ம் , சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என மன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.

அதன் போது தனது தரப்பினர்கள் 17ம் திகதி பாடசாலையில் ஓர் கூட்டம் என அதிபரால் அழைக்கப்பட்ட போது அக்கூட்டத்திற்கு சென்று இருந்தார்கள்  , கூட்டத்திற்கு சென்று கூட்டம் ஆரம்பமாகும் வரையில் அது எதற்கான கூட்டம் என தெரியாது. கூட்டம் ஆரம்பமான பின்னரே கூட்டம் தொடர்பில் அறிந்து கொண்டுள்ளார்கள்.

இந்த குற்ற செயலுக்கும் இவர்களுக்கும் எந்த விதமான தொடர்புகளும் இல்லை. இவர்கள் முதலாவது சந்தேக நபரான ஆசிரியருக்கு எந்த வகையிலும் உடந்தையாக செயற்படவில்லை. என மன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.அதற்கு பொலிசார் ,  குறித்த குற்றசெயல் தொடர்பில் தாம் விசாரனைகளை முன்னெடுத்து வருவதாகவும் , எனவே விசாரணை முடிவடைந்து மன்றில் விசாரணை அறிக்கை சமர்பிக்கும் வரையில் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என நீதவானிடம் கோரினார்கள்.

அதற்கு 6தொடக்கம் 9 வரையிலான சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எமது தரப்பினர் 17ம் திகதி பாடசாலை கூட்டத்திற்கு சென்றது மாத்திரமே. அவர்கள் சாட்சியங்களில் தலையீடு செய்யலாம் என பொலிசார் கூறுவதனை ஏற்க முடியாது. அவ்வாறு எனில் அன்றைய தினம் கூட்டத்திற்கு சென்ற அனைவரையுமே கைது செய்ய வேண்டும் என மன்றில் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நீதவான் கட்டளை பிறப்பித்தார். அதன் போது 6 தொடக்கம் 9 வரையிலான சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபர்களின் மானம் கப்பல் ஏறியது என மன்றில் தெரிவித்து இருந்தார். இலங்கையில் கப்பல் போக்குவரத்து சாதனமாக பயன்படுத்தப்படுவதில்லை.

பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ்  6 தொடக்கம் 9 வரையிலான சந்தேக நபர்களின் பிணை விண்ணபத்தை நிராகரிக்கின்றேன். இந்த நீதிமன்ற நியாதிக்கத்திற்கு உட்படாததற்கு இந்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்க முடியாது.அதேவேளை பொலிசார் இந்த வழக்கு தொடர்பில் விசாரணைகளை விரைவில் நடாத்தி விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்க வேண்டும்.

விசாரணை அறிக்கை சமர்ப்பித்த பின்னர் விளக்கமறியலில் உள்ள சந்தேகநபர்கள் சார்பில் அவர்களின் சட்டத்தரணி சமர்ப்பனங்களை முன் வைக்கும் போது இந்த நீதிமன்ற நியாதிக்கத்திற்கு உட்பட்டது என நீதிமன்ற கருதினால் அவர்களுக்கு பிணை வழங்க முடியும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலாம் சந்தேக நபர் உட்பட  6ம் ,7ம், 8ம், 9ம், சந்தேக நபர்களை எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார்.

Leave a comment