மரபணு சோதனைக்கு பெண்ணை உட்படுத்த கீழ்கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு

316 0

201611130834582299_hc-verdict-trial-court-has-authority-to-subject-the-girl_secvpfபாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணையும், அவரது குழந்தையையும் மரபணு சோதனைக்கு உட்படவேண்டும் என்று கீழ்கோர்ட்டு உத்தரவிட அதிகாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், பிரேமா என்ற பெண்ணை காதலித்தார். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி, பிரேமாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்று, அவள் கழுத்தில் மணிகண்டன் தாலிக்கட்டி திருமணம் செய்துகொண்டார். கணவன், மனைவியாக இருவரும் சில நாட்கள் வாழ்ந்து விட்டனர்.

ஆனால், இவர்களது திருமணத்தை மணிகண்டனின் பெற்றோர் ஏற்கவில்லை. பிரேமாவை வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். இதையடுத்து ஊர் பஞ்சாயத்தில் இவர்கள் விவகாரம் விசாரிக்கப்பட்டது. அப்போது, மணிகண்டன் தன் சகோதரியின் மகளை திருமணம் செய்து, அவளை முதல் மனைவியாக பாவிக்கவேண்டும் என்றும், பிரேமாவை இரண்டாவது மனைவியாக பாவிக்கவேண்டும் என்றும் பஞ்சாயத்தார் தீர்ப்பு அளித்துள்ளனர்.

இதையடுத்து தன்னுடைய சகோதரியின் 15 வயது மகள் சர்மிளாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மணிகண்டன் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரேமா கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 17-ந் தேதி புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி சர்மிளாவை குழந்தைகள் நல அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது தன் குடும்பத்தினர் தன்னுடைய தாய் மாமா மணிகண்டனுடன் வாழவேண்டும் என்று கூறியதாகவும், அவருடன் வாழ்ந்ததால் கர்ப்பம் அடைந்ததாகவும், இதைத்தொடர்ந்து மணிகண்டனுடன் தனக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் சர்மிளா கூறியுள்ளார்.

அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து, அவர் மைனர் பெண் என்றும், 4 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் சான்றிதழ் கொடுத்தனர். இதன்பின்னர் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்த சர்மிளா, மணிகண்டன் தன்னுடைய தாய் மாமா என்றும், வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இதை வீடியோ படமும் பிடிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் போலீசார் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதற்கிடையில், 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்மிளாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை என்று மணிகண்டன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, சர்மிளா கோர்ட்டில் ஆஜராகி, இந்த வழக்கில் தனக்கு எதுவும் தெரியாது என்று வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், மணிகண்டன் தன் கணவர் தான். ஆனால், அது தன் தாய் மாமன் மணிகண்டன் கிடையாது. தன் கணவர் மணிகண்டன் வெளிநாட்டில் உள்ளார் என்று சாட்சியம் அளித்துள்ளார்.

இதையடுத்து, குற்றச்சம்பவத்தை மறைப்பதாக கூறி, சர்மிளா மற்றும் அவரது ஆண் குழந்தையை மரபணு சோதனை செய்ய மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சர்மிளா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கை பொறுத்தவரை, மணிகண்டன் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்பதை விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யவேண்டியதுள்ளது.

மனுதாரர் தரப்பை பொறுத்தவரை மரபணு சோதனைக்கு உட்பட வேண்டும் என்று உத்தரவிட விசாரணை நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டது.

ஆனால், மனுதாரர் சர்மிளாவுக்கு பிறந்த குழந்தையின் தந்தை மணிகண்டனா? என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, மரபணு சோதனைக்கு உட்படவேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் உத்தரவிடவேண்டியதுள்ளது. அவ்வாறு உத்தரவிட அந்த நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உண்டு.

அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை என்றால், பெண்களை வேட்டையாடும் காமமிருகங்கள், சமுதாயத்தின் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த சிறுமிகளை கற்பழித்துவிட்டு, அந்த சிறுமிகளை கோர்ட்டில் பொய் சொல்ல வைத்து, தண்டனையில் இருந்து தப்பித்துவிடுவார்கள்.

எனவே, கோர்ட்டு உத்தரவின்படி, மனுதாரரும், அவரது மகனும் மரபணு சோதனைக்கு உட்படவேண்டும். அப்படியில்லை என்றால், மனுதாரர் மீது இந்திய தண்டனை சட்டம் 349-ன்படி (நீதிமன்றத்தில் உண்மையை கூறாமல் மறைத்தல்) தண்டனைக்கு உள்ளாக வேண்டியது வரும். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.