கொரோனா பீதி: மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற வெளிநாட்டு தம்பதி – விமான நிலையத்தில் பிடித்த போலீஸ்

246 0

கேரளாவில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு தம்பதியை போலீசார் விமான நிலையத்தில் பிடித்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், இந்தியாவிலும் வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 84 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கேரளா மாநிலத்தில் வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் வசித்துவந்த அமெரிக்க தம்பதிகள் கடந்த 9-ம் தேதி கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர்.
கொச்சி வந்தடைந்த தம்பதிகள் காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தம்பதிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் உடனடியாக தனி வார்டில் சேர்ந்து சிகிச்சை பெறும்படியும் அறிவுரை வழங்கினர்.
கோப்பு படம்
இதனால் அதிர்ச்சியடைந்த அமெரிக்க தம்பதிகள் தாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் இருந்து யாரிடமும் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
கொரோனா வைரஸ் அறிகளுடன் வந்த நபர்கள் மருத்துவமனையை விட்டு தப்பிச்சென்றது குறித்த தகவலை ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அமெரிக்க தம்பதிகளை கொச்சி விமான நிலையத்தில் இறக்கிவிட்ட கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விமான நிலையத்திற்கு விரைந்த போலீசார் அங்கு இருந்து வெளிநாடு செல்ல காத்திருந்த தம்பதியை பிடித்தனர்.
பின்னர் தம்பதிகளை எர்ணாக்குளம் மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் கொரோனா சிகிச்சைக்கான தனிப்பிரிவில் அனுமதித்தனர்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தம்பதிகள் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.