பெண் என்பதாலேயே என்மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன: மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி

418 0

பெண்’ என்ற காரணத்தினாலேயே தன் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறுகள் பரப்பப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளருமான திருமதி நளினி ரட்னராஜா தெரிவித்துள்ளார்.

இதனாலேயே பல பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அச்சம் கொள்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கை முழுவதும் சென்று பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான பயிற்சிகளை வழங்கிவரும் நிலையில், நானும் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே ஏனைய பெண்களையும் ஈடுபடுத்தமுடியும் என்ற அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிட முன்வந்தேன்.

ஆனால் என்மீது முகம் தெரியாத, அடையாளம் தெரியாத வலைத்தளங்களில் இருந்து ஒரு பெண் என்ற காரணத்தினால் நடத்தை தொடர்பான அவதூருகளும் அரசியல் ரீதியான அவதூறுகளும் எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படுகின்றன.

வடகிழக்கினை எடுத்துக்கொண்டால் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும் அதிகரித்துள்ளன. அவர்கள் தொடர்பாக பேசவேண்டிய தேவை தமிழ் சமூகத்தில் உள்ள எங்களுக்கு அதிகமாகவுள்ளது.

இவ்வாறான நிலையில், எனக்கு ஊக்கமளிப்பதற்கு பதிலாக என்மீது சேறு பூசும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளும் பல ஆண்கள் போட்டியிடும்போது அவர்கள் பற்றியோ, அவர்களின் நடத்தை பற்றியோ, அவர்களின் குடும்ப நிலை பற்றியோ இங்கு பேசுவதில்லை.

பெண் என்ற காரணத்தினால் அவரின் நடத்தையையே குறை சொல்வதையே பெரிய காரணமாக கொள்கின்றனர். இவ்வாறான நிலையிலேயே பல பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அச்சம்கொள்கின்றனர்” என மேலும் தெரிவித்துள்ளார்.