அவசர கதியில் கரோனா விழிப்புணர்வு ‘காலர் ட்யூன்’: தமிழில் இல்லாததால் மதுரை மக்கள் அதிருப்தி

234 0

மொபைல் போன்களில் வரும் ‘கரோனா’ வைரஸ் ‘காலர் ட்யூன்’ விழிப்புணர்வு விளம்பரம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் ஒலிபரப்பாவதால் அந்த விளம்பரம் விழிப்புணர்வில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே தெரியாமல் பெரும்பாலான மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

‘கரோனா’ வைரஸ் சீனாவைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழகத்திலும் அதன் அறிகுறியுடன் 200-க்கும் மேற்பட்டோர் சுகாதாரத்துறையின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். இதையடுத்து பொதுமக்களை சிறிது காலம் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இருமுவோர், தும்முவோரைக் கண்டாலே ஒதுங்கும் மக்களும் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளுக்குச் செல் லவே அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மொபைல் போனில் ‘காலர் ட்யூன்’ மூலம் கரோனா வைரஸ் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக யாருக்கு போன் செய்தாலும், அந்த ‘காலர் ட்யூன்’ வழக்கமானதாக இல்லாமல் ‘லொக், லொக்’ என்ற இருமலுடன் ஆரம்பிக்கும் அந்த விளம்பரத்தில் கரோனா வைரஸ் பற்றியும், மக்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

இந்த விளம்பரம் முடிந்தபிறகே அழைக்கும் நபருக்கு டயல் ஆகிறது.

தமிழகத்தில் இந்த விளம்பரம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே ஒலிபரப்பாகிறது. இதனால் அந்த விளம்பரத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே பெரும்பாலான மக்களுக்கு புரியவில்லை. அதன் காரணமாக, எந்த நோக்கத்துக்காக அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை என மக்கள் ஆதங்கம் தெரி விக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஒரு விழிப்புணர்வு விளம்பரத்தை உருவாக்கும்போது அது மக்களை எளிதாகச் சென்றடைய வேண்டும். ஆனால், இந்த விளம்பரம் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் உருவாக்கப்படவில்லை.

அவசர கதியில் உருவாக்கி உள்ளனர். அனைவருக்கும் ஆங்கிலம் சரளமாகத் தெரிய வாய்ப்பில்லை. இந்தி பெரும்பான்மையான மக்களுக்கு அறவே தெரியாது. அதனால் மத்திய அரசின் இந்த விளம்பரத்தால் விழிப்புணர்வு ஏற்படும் வாய்ப்பில்லை.” என்றனர்.

தமிழகத்தில் இந்த விளம்பரம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே ஒலிபரப்பாகிறது. இதனால் அந்த விளம்பரத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே பெரும்பாலான மக்களுக்கு புரியவில்லை.