சமூக நலம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக தமிழக மக்கள் ரஜினியுடன் கைகோர்த்து வர வேண்டும் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசினார்.காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் விழுப்புரம் வந்தார். அவர் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்று பேசியதாவது:-
தமிழகத்தில் அரசியலில் அழுக்கு நிரம்பியுள்ளது. அழுக்கு படிந்த மனிதர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அ.தி.மு.க- தி.மு.க. 50 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்து அரசியலை பாழ்படுத்தியுள்ளனர். தனிமனித வாழ்வாதாரம் தரம் இழந்து விட்டது. தமிழகத்தில் தரமான அரசியல் இல்லை.
காந்தியை நம்பி இந்தியாவே பின்னால் வந்தது. அதேபோன்று, ரஜினியின் பின்னால் தமிழகம் வர வேண்டும். சமூக நலம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக தமிழக மக்கள் ரஜினியுடன் கைகோர்த்து வர வேண்டும்.
தற்போது, கொஞ்சம் போட்டு நிறைய எடுப்பது என அரசியல் களம் மாறிவிட்டது. ரஜினி திரைப்படங்களில் மார்க்கெட் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை. மக்கள் நலன் மற்றும் அரசியலை தூய்மைப்படுத்த வந்துள்ளார்.
ரஜினியின் கொள்கைகள் தமிழக மக்களிடம் ஒவ்வொருவரும் கொண்டு செல்ல வேண்டும். இதற்காக ஒரு யுக புரட்சி ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் மாற்று அரசியல் தேவைப்படுகிறது. ரஜினி முதல்வராக கோட்டைக்கு சென்று, மாற்றம் உருவாக்க வேண்டும். புதிய திட்டங்களை மக்களுக்கு, அறிவிக்க வேண்டும். ரஜினி அரசியலுக்கு வந்தால், கட்சி வேறு, ஆட்சி வேறு என உருவாக்குவதாக கூறியுள்ளார்.
காந்தி காலத்தில் கட்சியை காந்தி நடத்தினார். ஆட்சியை நேரு நடத்தினார். ஆனால் காந்தி விருப்படி ஆட்சியை நேரு நடத்தவில்லை. எனவே ரஜினிகாந்த் கட்சியையும், ஆட்சியையும் நடத்த வேண்டும். அப்போதுதான் தனது எண்ணங்களை, திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
தமிழகத்தில் உள்ள 18 வயது வாக்காளர்களிடம் ரஜினி குறித்து கூறி, ரஜினி ரசிகர்கள் பிரசாரம் செய்ய வேண்டும். தமிழக முதல்வராக ரஜினி வர வேண்டும்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வித்தியாசமான, விசித்திரமானவர்கள். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் ஆட்சிக்கு வர நினைக்கின்றார்.
இதற்காக குடியுரிமை சட்ட திருத்த பிரச்சனையில் தி.மு.க. ஆதாயம் தேடுகின்றனர். குடியுரிமை சட்ட திருத்த நடைமுறைகளால் சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
கடந்த 2010-ம் ஆண்டு இந்த சட்டம் நடைமுறைப்படுத்தியது காங்கிரஸ் கூட்டணி கட்சி தான். அப்போது ஏன் மு.க.ஸ்டாலின் கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

