இரா.துரைரட்ணத்திற்கும் கட்சிக்கும் இனி எந்தவிதமான தொடர்பும் இல்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

373 0

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், இரா.துரைரட்ணத்திற்கும் கட்சிக்கும் இனி எந்தவிதமான தொடர்பும் இல்லை என ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்குவதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் தெரிவிக்கையில், மேலும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான குழுவினருக்கும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்ட அமைப்புடன் எங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில், பத்மநாபா மன்றம் (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்று செயற்படுவதாகவும் அந்த அமைப்பின் கீழ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்குவதாக தீர்மானம் எடுத்து அந்த தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் உள்ள தமிழரசு கட்சி , தமிழீழ விடுதலை இயக்கம் , தமிழீழ கழகம் என்பன ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கமைவாக நாங்கள் இன்றிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்குவதுடன் பத்மநாபா மன்றம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் விண்ணப்பித்துள்ளோம். அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு அதை அமுல்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அவர்களுடைய கட்சி கடந்த  ஒரு மாதத்திற்கு முன்பே ஆசனப் பங்கீட்டை பகிர்ந்திருக்கின்றன. இதனடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்.  அது இல்லாத பட்சத்தில் தமிழ் தேசியகட கூட்டமைப்புக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதோடு எதிர்காலத்தில் மாகாணசபைத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுடைய வாக்குகளைப் பிரிப்பதற்காக பல கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், பல அமைப்புக்கள் உருவாகியுள்ளன. எனவே  மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது விகிதாசார அடிப்படையில் மொத்தமாக 5 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய முடியும். இதில் 74 சத வீதமான தமிழ் பேசும் மக்கள் உள்ள இந்த மாவட்டத்தில் குறைந்தது 4 ஆசனங்களைப் பெறவேண்டும். ஒரு ஆசனத்தை முஸ்லிம் மக்கள் பெறுவேண்டும். ஆகவே நாங்கள் 4 ஆசனத்தைப் பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து முழுமையாக செயற்படவேண்டும் என்ற தீர்மானத்தை  எடுத்துள்ளோம்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணத்திற்கும்  கட்சிக்கும் தற்போது எந்தவிதயான தொடர்பும் இல்லை என ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார்.