கரோனா வைரஸ்: சீனாவில் சிக்கியுள்ள தங்கள் நாட்டவர் 171 பேரை மீட்கும் திட்டத்தை கைவிட்டது வங்கதேசம்

429 0

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் சிக்கி இருக்கும் தங்கள் நாட்டு மக்கள் 117 பேரை மீட்கும் திட்டத்தை வங்கதேசம் அரசு கைவிட்டது.

தங்கள் நாட்டு மக்களை அழைத்துச் செல்லும் விமானத்தை இயக்க எந்த விமானியும் முன்வராததாலும், விமான ஊழியர்கள் உடன் செல்ல மறுத்துவிட்டதாலும் இந்த முடிவை வங்கதேச அரசு கைவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை அங்கு 800-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார். 25 நாடுகளுக்கும் மேலாக அந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் சீனாவில் சிக்கி இருந்தனர். அவர்களை மீட்க முதல்கட்டமாக கடந்த 1-ம் தேதி அரசு விமான நிறுவனமான பிமான் ஏர்லைன்ஸ் சென்றது. அந்த விமானத்தில் 15 குழந்தைகள் உள்ளிட்ட 312 பேர் மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.

 

இந்நிலையில் இன்னும் 171பேர் சீனாவில் சிக்கி இருப்பதால், 2-வது கட்டமாக அவர்களை அழைத்துவர வங்கதேச அரசு விமானத்தை ஏற்பாடு செய்தது. ஆனால், சீனாவில் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸின் தாக்கத்துக்கு அஞ்சி, தங்களின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் விமானிகள் விமானத்தை இயக்க விமானிகள் மறுத்துவிட்டனர், மேலும், விமான ஊழியர்களும் விமானத்தில் செல்ல மறுத்துவிட்டனர்

இதுகுறித்து வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் நிருபர்களிடம் கூறுகையில், ” எங்களால் இப்போது எந்த விமானத்தையும் அனுப்ப முடியாது. விமானியோ அல்லது விமான ஊழியர்களோ செல்ல மறுத்துவிட்டார்கள். ஆதலால், சீனாவில் சிக்கி இருக்கும் வங்கதேச மக்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டோம். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றைச் சீன அதிகாரிகள் வழங்குகிறார்கள். பற்றாக்குறை ஏற்பட்டது என்று கூறுவது தவறாகும். சீனாவில் சிக்கி இருக்கும் வங்கதேச மக்களிடம் தொடர்ந்து வங்கதேச அரசு தொடர்பில் இருந்து வருகிறது. இப்போதுள்ள சூழலில் அவர்களை மீட்க முடியாவிட்டாலும் விரைவில் மீட்போம் ” எனத் தெரிவித்தார்