பாஸ்போர்ட் இல்லாமல் கர்தார்பூருக்கு அனுமதி: பாகிஸ்தான் அரசு பரிசீலனை

315 0

பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியர்களை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் இஜாஸ் ஷா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் உள்ளது கர்தார்பூர் பகுதி. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக், தனது இறுதிக்காலதில் இந்தப் பகுதியில்தான் இருந்தார் என நம்பப்படுகிறது. அவரது நினைவாக அங்கு குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த குருத்வாராவுக்கு சென்று வழிபட வேண்டும் என்பது அவர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாகும். ஆனால், பாகிஸ்தானுக்கு விசா பெற்று இஸ்லாமாபாத்துக்கு சென்று அங்கிருந்து கர்தார்பூர் செல்வதற்கு 2 நாட்களுக்கும் மேலாக ஆகிவிடுகிறது.

இதனால், பஞ்சாப் மாநிலத்துக்கு அருகே இருக்கும் கர்தார்பூருக்கு வழித்தடம் அமைக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதைடுத்து, இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வழித்தடத்தை அமைத்தன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இது திறந்து வைக்கப்பட்டது.

பாஸ்போர்ட் கட்டாயம்

தற்போது இந்த வழித்தடத்தின் மூலமாக கர்தார்பூருக்கு செல்ல பாஸ்போர்ட் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், பாஸ்போர்ட் இல்லாமல் கர்தார்பூருக்கு இந்தியர்களை அனுமதித்தால் அதிக அளவில் பணம் வசூலாகும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அண்மையில் யோசனை தெரிவித்தது.

இந்நிலையில், இந்த திட்டம் குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் இஜாஸ் ஷா நேற்று தெரிவித்துள்ளார். – பிடிஐ