ஊழலற்ற அரசை தருவார் என மக்கள் நம்புகின்றனர்: ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவது உறுதி – தமிழருவி மணியன் கருத்து

263 0

ஊழலற்ற அரசை ரஜினிகாந்த் தருவார் என மக்கள் நம்புகின்றனர். அவர் புதிய கட்சி தொடங்குவது உறுதி என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து தமிழருவி மணியன் கூறியதாவது:

ரஜினிகாந்த் ஒரு கட்சியை தொடங்க இருக்கிறார். அந்த கட்சி எப்போது தொடங்கப்படும், கட்சியின் மாநாடு எப்போது நடத்தப்படும், கட்சியின் பெயர் என்ன, கொள்கைகள் என்ன என்பது குறித்தெல்லாம் ரஜினிதான் தெரிவிக்க வேண்டும். அவர் சார்பில் மற்றொருவர் தெரிவிக்க எந்த உரிமையும் இல்லை. இந்த அளவுக்குகூட புரிதல் இல்லாமல் நான் இல்லை.

என்னைப் பொறுத்தவரை ரஜினியின் உண்மையான நண்பனாக இருக்கிறேன். அவர் மூலம் தமிழக அரசியலில் நல்ல மாற்றம் நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன். கட்சி தொடங்குவது தொடர்பாக, ரஜினியே ஊடகங்களை அழைத்து அறிவிப்பார். அவருக்கான செய்தித்தொடர்பாளர் நான் இல்லை. ரஜினி தொடங்கக்கூடிய கட்சிக்காரனும் நான் இல்லை. நான் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக இருப்பவன்.

ரஜினி ஏப்ரலில் கட்சி தொடங்குவாரா, ஆகஸ்ட் மாதத்தில் மாநாடு நடத்துவாரா, பாமக உடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்விகளுக்கு, ‘வாய்ப்பிருக்கிறது’ என்றே பதில்அளித்திருக்கிறேன். ரஜினி கட்சிதொடங்கும்வரை எந்த ஊடகத்துக்கும் பதில் அளிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்.

ஒரு இதழ் நடத்திய ஆய்வில்,70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகத்துக்குரியது என்ற செய்தியை திட்டமிட்டே பரப்புகின்றனர். ரஜினிஅரசியல் களத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் அரசியல் உலகில் இருப்போர் பலருடைய நோக்கமாக இருக்கும். ரஜினிவருகையினால் ஆட்சியை இழந்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் உள்ளனர். ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்ற கனவோடு கால் பதித்து நடந்து கொண்டிருப்பவர்கள் ரஜினியால் தமது கனவு கலைந்துவிடுமே என்ற கலக்கத்தில் உள்ளனர். இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள், ரஜினி எதை பேசினாலும் அதை பூதாகரமாக்க வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறது.

இந்நிலையில், ஒன்றை மட்டும்,ரஜினி சார்பாக வெளிப்படுத்துகிறேன். அதற்கு ரஜினி எனக்கு உரிமையும் வழங்கி இருக்கிறார். ரஜினி நிச்சயமாக அரசியல் களத்துக்கு வருகிறார். அரசியல் கட்சியை தொடங்குகிறார். அவர்விரும்பியபடி குறிப்பிட்ட காலத்தில், விரும்பிய இடத்தில் மாநாட்டை நடத்துவார். அதன்பிறகு, மக்களை சந்தித்து தனது லட்சியங்கள், நோக்கங்கள், அரசியலுக்கு வந்ததற்கான காரணங்களை அவரே விளக்குவார்.

பெரும்பான்மையான மக்கள், இந்த இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு நல்ல அரசியலை வளர்த்துவிட முடியாதா என்று ஏங்குகிறார்களே, அந்த ஏக்கத்தை அறிவேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் சொல்கிறேன், எப்போது தேர்தல் வந்தாலும், ரஜினி வந்து நிற்கும்போது நிச்சயமாக அவரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். தமிழருவி மணியன் விரும்புகிறபோது ரஜினி முதல்வராக ஆகிவிட முடியாது. ரஜினி விரும்பினாலும் அது நடக்காது. மக்கள் வாக்களிக்க வேண்டும். பெரும்பான்மையான மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை தரக்கூடிய மிக நல்ல மனிதர் ரஜினிகாந்த் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ரஜினி மிகப்பெரிய சிந்தனையாளர், தீர்க்கதரிசி, தத்துவ ஞானி என்றெல்லாம் மக்கள் நினைக்கவில்லை. ரஜினி நல்லவர், நேர்மையானவர், உண்மையுடன் அரசியலில் நடைபோடுவார். இவரால் நமக்கு நல்லது நடக்கும். ஊழலற்ற அரசை இவர் உருவாக்கித் தருவார் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்தார்.