தாய்லாந்து வணிக வளாகத்தில் 27 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொலை

277 0

தாய்லாந்து நாட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தி 27 பேரை கொன்ற ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் நகோன் ராட்சசிமா என்ற நகரம் உள்ளது.

இங்குள்ள பிரபல வணிக வளாகம் முன்பு நேற்று மாலை காரில் வாலிபர் ஒருவர் வந்து இறங்கினார். அவர் திடீரென வணிக வளாகத்திற்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை எந்திரத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார்.

இதை எதிர்பாராத மக்கள் அலறியடித்தபடி வணிக வளாகத்தில் இருந்து ஓடினர். எனினும் வாலிபர் சுட்டதில் குண்டுகள் உடலில் பாய்ந்து பலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் ராணுவ கமாண்டோக்கள் விரைந்து சென்றனர். அதற்குள் வணிக வளாகத்தில் இருந்த சிலரை அந்த வாலிபர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை மீட்கவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பிடிக்கவும் துப்பாக்கியால் துல்லியமாக சுடக்கூடிய வீரர்கள் வணிக வளாகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். முதற்கட்டமாக தரைத் தளத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் அவர் வணிக வளாகத்தின் ஒரு புறத்தில் மறைவாக பதுங்கி இருந்தான்.

24 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்த வாலிபரை இன்று அதிகாலை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அவர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் துப்பாக்கி சூடு நடத்தியவர் ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய ஜாக்ரபந்த் தொம்மா என்பது தெரிய வந்தது. இவர் ராணுவ மையத்தின் தளவாடப் பகுதியில் இருந்து ஆயுதங்களை திருடி உள்ளார்.

அப்போது தடுக்க முயன்ற சக ராணுவ வீரர் உள்ளிட்ட 3 பேரை சுட்டுக்கொண்றுள்ளார். அதன்பிறகு தான் வணிக வளாகத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இவரது தாக்குதலில் மொத்தம் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 42 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஜாக்ரபந்த் தொம்மா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவதற்கு முன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் வணிக வளாகம் முன்பு தன்னைத் தானே புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதற்கு முன்பு பேஸ்புக் பக்கத்தில் ‘அனைவருக்கும் மரணம் தவிர்க்க முடியாதது’ என்று பதிவிட்டுள்ளார். வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதையும் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பி உள்ளார். அப்போது ‘நான் இதை கைவிட வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதையறிந்த ராணுவ அதிகாரிகள் பேஸ்புக் நிர்வாகத்துக்கு புகார் செய்து அவரது பேஸ்புக் கணக்கை உடனடியாக முடக்கி உள்ளார்.

அவருக்கு குடும்ப பிரச்சினை இருந்து உள்ளது. இதன் காரணமாக மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்க வில்லை. அவர் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்? என்று விசாரணை நடந்து வருகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் யாரேனும் உயிரிழந்துள்ளனரா? என்ற தகவல் இதுவரை வெளியாக வில்லை.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓசா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.