ஏலியன்கள் அனுப்பும் சிக்னல்களை கண்டறியும் தொலைநோக்கியை உருவாக்கும் ரஷ்யா!

293 0

வேற்று கிரகவாசிகள் அனுப்பும் சமிக்ஞைகளைத் தேட உதவும் நவீன தொலைநோக்கியை உருவாக்கும் பணியை ரஷ்ய விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அறிவியலாளர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானமும் அறிவியலும் பெருமளவு வளர்ச்சி அடைந்த போதிலும் இயற்கையின் எத்தனையோ விந்தைகளுக்கு பதில் இல்லை என்றே கூறலாம். அதிலும் வானில் தோன்றுவதாக கூறப்படும் பறக்கும் தட்டுகள், ஏலியன்கள், வினோதமான உருவங்கள் போன்ற சில விந்தைகள், மனித குலத்திற்கு புரியாத புதிராகவே உள்ளன. ஏலியன் என்ற வார்த்தைக்கு வெளியிடத்தைச் சேர்ந்தவர் என்பதே சரியான அர்த்தம். ஆனால் நாம் அந்த வார்த்தையை வேற்று கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்களை குறிப்பிட பயன்படுத்துகிறோம்.
பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்ததாகவும் அதிலிருந்து வேற்றுகிரகவாசிகள் இறங்கி வந்ததாகவும் கூறப்படுகின்றன. ஏலியன்கள் இருக்கலாம் என்றே கூறப்படுகிறதே தவிர உறுதியான தகவல்கள் இல்லை என்றே ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், வேற்றுகிரவாசிகளான ஏலியன்கள் அவற்றின் சமிஞ்கைகளை ஆப்டிக்கல் ஸ்பெக்ட்ரத்தில் (ஒளியியல் நிறப்பட்டை) கடத்தினால் அவற்றை கண்டறிய உதவும் நவீன தொலைநோக்கியை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளதாக ரஷ்ய அறிவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி
ரஷ்யாவின் மாஸ்கோ ஸ்டேட் பல்கலைகழகத்தில் அணு இயற்பியல் பிரிவில் முன்னணி ஆய்வாளராக பணிபுரிபவர் அலெக்சாண்டர் பனோவ். சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பனோவ் பேட்டியளித்தார். அதில் அவர் பேசியதாவது:-
இந்த தொலைநோக்கியின் முக்கிய நோக்கம் அண்ட கதிர்களை (காஸ்மிக் கதிர்கள்) கண்காணிப்பதாகும். இருப்பினும், இந்த கருவி மூலம் ஒளியின் பிரகாசமான மற்றும் குறுகிய ஒளியியல் ஃப்ளாஷ்களையும் (மின்வெட்டொளி) உற்று நோக்கலாம். ரேடியோ அதிர்வெண் வரம்பைக் காட்டிலும் லேசர் சேனல் வழியாக யாராவது பூமிக்கு சமிக்ஞைகளை அனுப்பலாம். ஆப்டிகல் ஸ்பெக்ட்ரமில் விண்வெளி செய்திகளை அனுப்ப லேசர் அமைப்பை உருவாக்கும் திறன் நமக்கு உள்ளது. வேற்று கிரகவாசிகளின் சமிக்ஞைகளைத் தேடவும் இந்த கருவியைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்காலத்தில் வேற்று கிரக நாகரிகங்களைத் தேடுவது குறித்து ரஷ்யா ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுதாக விஞ்ஞானிகள் சிலர் கூறிவருகின்றனர்.