திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் – பசுமை தீர்ப்பாயம்

352 0

சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் கே.ஆர்.தியாகராஜன். மீனவர் நலச்சங்க தலைவர். இவர், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிலவி வரும் நெரிசலைக் குறைக்கவும், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவும் திருவொற்றியூரில் ரூ.242 கோடி மதிப்பில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இந்த துறைமுகம் 500 முதல் 800 படகுகளை நிறுத்தும் வகையிலும், 60 ஆயிரம் டன் மீன்களைக் கையாளும் வகையிலும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. புதிய துறைமுகம் அமைக்க சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கோரி தமிழக மீன்வளத்துறை விண்ணப்பித்தது.

இந்த விண்ணப்பத்தின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் புதிய துறைமுகத்துக்கான கட்டுமான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

எனவே, கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும். அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றவும், மீன்வளத்துறை இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் மகேசுவரன், ‘கடல்வளம், மீன்வளம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக துறைமுகத்துக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்போது, என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகளை உருவாக்கி உள்ளது. சுற்றுச்சூழல்துறை, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்வதால் மீன்வளம், கடல்வளம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் பாதிக்கப்படுவர்’ என்றார்.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ‘திருவொற்றியூரில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும். சென்னை கலெக்டர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளை கொண்ட குழு நேரில் ஆய்வு செய்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மார்ச் 26-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டுள்ளது.