கோபி பிரையன்ட் ஹெலிகாப்டர் எப்படி விழுந்து விபத்துக்குள்ளானது? கடைசியாக பைலட் பேசியது என்ன?

210 0

அமெரிக்க என்பிஏ கூடைப்பந்தாட்ட சூப்பர் ஸ்டார் கோபி பிரையன்ட் பயணம் செய்த ஹெலிகாப்டர் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் என்பிஏ கூடைப்பந்து கூட்டமைப்பின் நட்சத்திர வீரரும், லாஸ் ஏஞ்செல்ஸ் லேக்கர்ஸ் அணியின் முக்கிய வீரர் கோபி ப்ரையன்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.

கோபி ப்ரையன்ட் தனது 13 வயது மகள் ஜியானா உட்பட 8 பேருடன் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஆரஞ்ச் கவுண்டியில் உள்ள சான்டா அனா நகரில் இருந்து தவுசண்ட் ஆக்ஸ் என்னும் பகுதியை நோக்கிச் சென்றார்.

அப்போது, கடும் பனி மூட்டத்தின் நடுவே கலாபஸாஸ் என்னும் இடத்தில் உள்ள மலை மீது மோதி ஹெலிகாப்டர் நொறுங்கியது. இதில் கோபி ப்ரையன்ட், அவரது 13 வயது மகள் ஜியானா உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக் குறித்தும், எப்படி விபத்து நடந்தது குறித்தும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய போக்குவரத்து பாதுகாப்புத்துறை அதிகாரியும், விசாரணை அதிகாரியுமான ஜெனிஃபர் ஹோமென்டி நிருபர்களிடம் கூறியதாவது:

”கோபி பிரையன்ட் பயணம் செய்த ஹெலிகாப்டர் பனி மூட்டத்தில் சிக்காமல் தவிர்க்கும் வகையில் உயரமாக பறக்க முயன்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. ஹெலிகாப்டரின் பைலட் பெயர் அரா ஜோபியன். இவர்தான் சான்டா தீவின் தலைமை பைலட்டும், ஹெலிகாப்டரின் உரிமையாளரும் ஆவார். இவருக்கு 10 ஆண்டுகள் அனுபவமும், 8 ஆயிரம் மணிநேரம் பறந்த அனுபவமும் இருந்தது.

ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அதிகமாக மேகக்கூட்டங்கள் வந்ததால், வானிலை மோசமடைந்துள்ளது. அப்போது, கடைசியாக பைலட், விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, பனிமூட்டமாக இருக்கிறது. உயரமாகப் பறப்பதற்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் ரேடார் உதவியுடன் ஆய்வு செய்த பின் 3 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க அனுமதித்துள்னர். பிரையன்ட் பயணித்த ஹெலிகாப்டர் 2,300 அடி உயரம் வரை பறந்தவரை கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்துள்ளது.

அதன்பின் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து ஹெலிகாப்டர் சிக்னல் துண்டிக்கப்பட்டது. அதன்பின் பார்த்தபோது, ஏறக்குறைய ஆயிரத்து 440 அடி உயரத்தில் உள்ள மலையின் மீது மோதி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது.

ஹெலிகாப்டரின் உயரத்தை அதிகரிக்கும்போது, மலை மீது மோதாமல் தவிர்க்க பைலட் முயன்றபோது இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஹெலிகாப்டர் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி கிடைத்து உயரமாக பறக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், விமானத்துக்கு உதவும் வகையில் ராடார் உதவியையும் பைலட் கோரியுள்ளார். ஆனால், மிகவும் தாழ்வான தொலைவில் ரேடார் உதவி கோர முடியாது என்று கட்டுப்பாட்டு அறையில் இருந்து தெரிவித்துள்ளனர்.

அதன்பின் 4 நிமிடங்கள் வரை பைலட், மேகக்கூட்டத்தைத் தவிர்க்க உயரே பறந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து தொடர்பு கொண்டும் சிக்னல் கிடைக்கவில்லை. கடைசியாக ஹெலிகாப்டர் 2,300 அடி உயரம் வரை பறந்தது பதிவாகியுள்ளது. கடைசியாக காலை 9.45 மணிக்கு பைலட் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

உயரமாகப் பறக்கும்போது பைலட் சிலநொடிகள் நிலை தவறினாலும், ஹெலிகாப்டர் தலைகுப்புறக் கவிழ்ந்துவிடும். நீங்கள் வெளியே புறச்சூழல் என்னவாக இருக்கிறது என்பதை அறியமுடியாத சூழலில் பறக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், பைலட்டின் உயிர்வாழும் காலம் என்பது இதுபோன்ற நேரங்களில் 15 வினாடிகள் மட்டுமே. அடுத்து என்ன நடக்கும் என்பதை யாரும் கணிக்க முடியாது.

பொதுவாக ஹெலிகாப்டர் இதுபோன்ற நேரங்களில் இவ்வளவு அதிகமான உயரத்தில் ஹெலிகாப்டர் பறக்க அனுமதி வழங்குவதில்லை. விமானங்கள் பறக்கும் உயரமான இடத்தில் பறக்கக்கூடாது. ஆனால், எதிர்பாராத சூழலில் அனுமதி வழங்கியும் விபத்தில் சிக்கிவிட்டது. ஆனால், பனிக்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன”.

இவ்வாறு ஜெனிபர் தெரிவித்தார்