குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் – தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

253 0

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாம் தொடர்பாக, தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தியது.
விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது. அதன்படி, 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே, டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், சார்பு செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், முறைகேடு செய்து சேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த, கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்தவரை செல்போன் சிக்னல் மூலம் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.