காஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்குதலால் பெரியார் சிலை சேதம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

234 0

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே கலியப்பேட்டையில் மர்ம நபர்களால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து சாலவாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பதற்றமான சூழல் காரணமாக அப்பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கலியப்பேட்டையில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் சிலையின் முகம் மற்றும் கை பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர். இந்தச் சிலை உள்ளூர்வாசிகளால் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக வைக்கப்பட்டது. இதனைத் திராவிடர் கழகத் தலைவர்கள் திறந்து வைத்தனர். மர்ம நபர்களின் தாக்குதலால் பெரியார் சிலை சேதம் அடைந்ததையடுத்து, வெள்ளைத் துணியால் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி பேசியபோது, பெரியார் 1971-ல் நடத்திய பேரணி குறித்து தன் கருத்தைத் தெரிவித்ததையடுத்து கடும் சர்ச்சைகளும், கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் பெரியார் சிலையைச் சேதப்படுத்தி இருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசிக நிர்வாகிகள், சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.