துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பாரா? – அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

312 0

துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பாரா என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124-வது பிறந்த நாள் இன்று (ஜன.23) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டோர், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நேதாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவியை விட்டுத் தரத் தயாரா என முதல்வர் பழனிசாமிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளாரே?

அதிமுகவில் அடிமட்டத் தொண்டன் கூட கொடி கட்டிய காரில் வர முடியும். நாங்களெல்லாம் மிட்டா மிராசுதாரர்கள் அல்ல. எங்களுக்கென்று பெரிய பாரம்பரியம் கிடையாது. ஆனால், நாங்களெல்லாம் கொடி கட்டிய காரில் பவனி வருகிறோம் என்று சொன்னால், அதிமுகவும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்தான் காரணம். அதிமுகவில் கடைக்கோடி தொண்டன் கூட முதல்வராகலாம் என முதல்வர் கூறினார். அதற்கு சாட்சியாகத்தான் முதல்வர் இருக்கிறார். கிளைச்செயலாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கி இன்றைக்கு முதல்வராக இருக்கிறார் என்றால், அந்த அளவுக்கு அதிமுகவுக்கு உழைத்ததன் காரணமாக முதல்வராக உயர்ந்திருக்கிறார்.

திமுகவில் இது சாத்தியமா? பல ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்த துரைமுருகன், ஏன் திமுக தலைவராக வரவில்லை? திமுக தலைவர் ஸ்டாலின் அதனை விட்டுக்கொடுப்பாரா? துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பாரா? திமுகவில் இது சாத்தியமில்லை.

திமுகவில் தந்தை, மகன், பேரன் என தலைவர் பதவி தொடரும். இப்போது உதயநிதிக்கு ஒரு பேரன் வந்தால் அவர் தான் தலைவர் எனத் தொடரும். ஆனால், அதிமுகவில் உழைப்பவரே உயர்ந்தவர் என்ற அடிப்படையில் முதல்வர் இக்கருத்தைச் சொல்லியிருக்கிறார். க்ளைமாக்ஸைப் பாருங்கள் என்கிறார் ஸ்டாலின். க்ளைமாக்ஸில் ஹீரோதான் ஜெயிப்பார். வில்லன்கள் ஜெயித்ததாக வரலாறு கிடையாது. அதிமுகதான் ஹீரோ. 2021 சட்டப்பேரவைத் தேர்தல் கிளைமாக்ஸில் நாங்கள் தான் முழு வெற்றி பெறுவோம்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 17% குறைந்துள்ளதே?

நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் அதிமுக அரசின் நிலைப்பாடு. அதற்காக மசோதா நிறைவேற்றியிருக்கிறோம். நீட் தேர்வு தேவையில்லை என்றுதான் இன்றும் முயற்சிகள் எடுத்து வருகிறோம். வருங்காலத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் சதவீதம் அதிகரிக்கும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாரபட்சம் கிடையாது. விசாரணை நடக்கும் தருவாயில் இதுகுறித்து கருத்துச் சொல்ல முடியாது.

பாஸ்டேக் முறையில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

இந்திய அரசுதான் அதற்கான கட்டணத்தை வசூலிக்கின்றது. பொதுமக்களின் சிரமங்களை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறதே?

தமிழக மக்களுக்குத் தெரியும். இவற்றையெல்லாம் கொண்டு வந்ததே திமுகதான். அவர்கள் செய்துவிட்டு அதிமுக மீது பழிபோடுகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.