ரஜினி பேச்சில் தவறில்லை, பயத்தால் விமர்சிக்கிறார்கள்- பொன்.ராதாகிருஷ்ணன்

217 0

ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் மாற்றங்கள் வந்துவிடும் நமக்கு ஏமாற்றமாகி விடும் என்ற பயத்தின் காரணமாகவே அவரை கொச்சைப்படுத்துவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஜினியைப் பற்றி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இவ்வளவு பதறுவது ஏன்? ரஜினிகாந்த் பெரியாரைப் பற்றி எதையும் சொல்லவில்லை.

அவர் நடத்திய ஊர்வலத்தில் நடந்த சம்பவங்களை துக்ளக் ஆசிரியராக இருந்த சோ மட்டும் துணிச்சலாக எழுதினார் என்று அவருடைய துணிச்சலை பற்றி துக்ளக் விழாவில் குறிப்பிட்டிருக்கிறார். இதில் யாருக்கு என்ன அவமரியாதை வந்தது.

இன்னொரு கோணத்தில் பார்ப்போம். திராவிடர் கழகம் கடவுள் மறுப்பு கொள்கை உடைய இயக்கம். அப்படி இருக்கும்போது கடவுள் படங்களை ஊர்வலத்தில் ஏன் எடுத்துச் செல்லவேண்டும். நிச்சயமாக அந்தப் படங்களுக்கு அவர்களால் மரியாதை செய்ய முடியாது.
ரஜினிகாந்த்

அப்படியானால் அசிங்கப்படுத்துவதை தவிர வேறு என்ன இருக்க முடியும்? ரஜினி எதைச் சொன்னாலும் அவரை விமர்சிக்கவும் கொச்சைப்படுத்தவும் இங்குள்ள அரசியல்வாதிகள் வரிந்து கட்டுவது ஏன்?

அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் மாற்றங்கள் வந்துவிடும் நமக்கு ஏமாற்றமாகி விடும் என்ற பயத்தின் காரணமாகவே இவ்வாறு அவரை கொச்சைப்படுத்துகிறார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதேபோல் இந்த தையில் ஒரு மாற்றம் தொடங்கி இருக்கிறது. பல கட்சிகளுக்கு எங்கே நமது கொள்கை செயலற்றுப் போகும் என்ற பயமும் வந்திருக்கிறது.

மழைக்காலம் தொடங்கும் போது மயில் தோகை விரித்து ஆடும். தவளைகள் கத்தும். அதேபோலத்தான் தமிழக அரசியலிலும் ஒரு மாற்றம் வரலாம்.

தோகை விரித்து ஆடுபவர்களும் இருக்கிறார்கள். கருத்து சொல்பவர்களும் இருக்கிறார்கள். இவை இருக்கத்தான் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.