ஏமனில் 100 பேர் பலியான தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு சவுதி கண்டனம்

219 0

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஏமன் நாட்டில் சனாவிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மத்திய மாகாணமான மரிப். இங்குள்ள ராணுவ முகாமைச் சேர்ந்த வீரர்கள் மசூதி ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வான்வழி மூலம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியா கூறும்போது, “ஹவுத்தி தீவிரவாதிகள் நடத்திய இத்தீவிரவாதத் தாக்குதலை சவுதி அரசு கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய இத்தாக்குதலுக்கு ஐக்கிய அமீரகம், எகிப்து ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னதாக, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசாங்கத்தை ஆதரிக்க சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் மோதலில் தலையிட்டதனால், 2015 முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மில்லியன் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர்.

இந்த மோதல் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும் நாட்டை பஞ்சத்தின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.