‘முதலமைச்சர்’ விக்கியும் ‘காலைக்கதிர்’ வித்தியும்!

367 0

download-44வடக்கு மாகாண முதலமைச்சர் கனவோடு சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் இருந்த கதை இங்கு எல்லோருக்கும் தெரியும். 2010 பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் கூட்டமைப்பு வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்பிருந்தும், அவரது மைத்துனரும் ‘உதயன்’ பத்திரிகையின் உரிமையாளருமான ஈ.சரவணபாவனின் அதீத தலையீட்டினால் வித்தியாதரன் அந்த வாய்ப்பை இழந்தார். ஆனாலும், அப்போது அவருக்கு ‘வடக்கு மாகாண முதலமைச்சர்’ என்கிற வாய்ப்பு வழங்கப்படும் என்கிற உறுதிப்பாடு தமிழரசுக் கட்சியின் தலைமையினால் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதன்பின்னர் அவர், தமிழரசுக் கட்சியின் முக்கிய பொறுப்புக்களை ஆற்றியிருந்தார். பலரது பாராளுமன்ற உரைகள் எல்லாம் அவரினால் எழுதப்பட்டுமிருக்கின்றன.

ஆனால், பிந்திய அரசியல் களம், அவரை வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் எனும் நிலையிலிருந்து நீக்கி, முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தியது. அதிலிருந்து, வித்தியாதரன் தமிழரசுக் கட்சியில் தான் வகித்து வந்த கொழும்பு மாவட்ட முக்கியஸ்தர் (செயலாளர் என்று நினைக்கிறேன்) பொறுப்புக்களையும் உதறித்தள்ளிவிட்டு “ஜனநாயகப் போராளிகளின்” ஒருங்கிணைப்பாளர்கள் ஆனார்.

ஆனால், அவர் இரண்டு விடயங்களை திரும்பத் திருப்ப கடந்த காலங்களில் கூறி வந்தார்.
1. ‘உதயன்- சுடரொளி’ தமிழ்த் தேசியப் போராட்டத்தின் மீதும், அது கொடுத்த விலைகளின் மீதும் கட்டமைக்கப்பட்ட ஒன்று. அப்படிப்பட்ட நிலையில், அதனைக் காட்டி பதவிகளைப் பெறுவதில் தனக்கு உடன்பாடில்லை. அதனால்தான், சரவணபவன் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் கைச்சாத்திட்டதும், ‘உதயன்- சுடரொளி’ பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து தான் விலகியதாக கூறினார்.

2. தனக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய எண்ணப்பாடோ, கனவோ என்றைக்குமே இருந்ததில்லை என்றும் சொல்லி வந்தார்.

இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் சில மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு வழங்கிய போட்டியிலும் திரும்பத் திரும்ப அவர் கூறிக் கொண்டிருந்தார். அவர் கூறுவது கிட்டத்தட்ட பொய் என்று தெரிந்த பின்னரும் அவர் அந்தக் கூற்றினை கூறிக் கொண்டிருந்தார். அது, ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் தோற்றம் பற்றிய நேர்காணல்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ‘காலைக்கதிர்’ அறிமுக விழாவில் சி.வி.விக்னேஸ்வரன், என்.வித்தியாதரன் தன்னிடம் வந்து உரையாடிய கதையைச் சொல்லி எல்லாவற்றையும் மீண்டும் தவிடு பொடியாக்கியிருக்கிறார். அதாவது, தன்னிடம் வந்த வித்தியாதரன், “வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தான் தமிழரசுக் கட்சியினால் முன்னிறுத்தப்படவுள்ளதாகவும், தேர்தல் காலத்தில் சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவளிக்க வேண்டும்” என்றும் கோரினாராம். அதைத்தான் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று போட்டுடைத்தார்.

ஆக, என்.வித்தியாதரன் முதலமைச்சர் கனவோடு இருந்தார் என்பதுவும், ஜனநாயகப் போராளிகளோடு கூட்டமைப்புக்கு அவர் மீண்டும் கொடுக்க நினைத்த அழுத்தம் எவ்வாறானது என்பதுவும் உணர்ந்து கொள்ளப்படக் கூடியது. வாய் ஜாலங்களைத் தாண்டியது அரசியல் உண்மைகள்.

எது எவ்வாறாயினும், ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர் என்கிற வகையில் தனது பணியை மீண்டும் ஆரம்பித்திருக்கும் என்.வித்தியதரனுக்கும், காலைக்கதிருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்! தடம் மாறாது பயணிக்க வேண்டுகிறேன்!!

புருஜோத்மன் தங்கமயில்