பெரிய அளவில் கட்டுமான பணிகளுக்கு புதிய ஒற்றைச்சாளர முறை

346 0

201611060915468925_new-single-window-system-for-large-scale-construction-works_secvpfபெரிய அளவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெறுவதற்கான புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

இந்திய கட்டுமான சங்கத்தின் பவளவிழா நிறைவு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:-நான் நேற்று இரவு (நேற்றுமுன்தினம்) சென்னைக்கு வந்தேன். வந்ததும் தமிழக தலைமை செயலாளரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து கேட்டேன்.

அதற்கு அவர், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக தேறிவருவதாகவும், விரைவில் வீடு திரும்ப இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. அவர் விரைவில் குணம் அடைந்து அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.

ஒரு தனிப்பட்ட சேனல் தேசிய நலன் கொண்டு செயல்படாத காரணத்தால் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை ஏதோ இரவோடு இரவாக எடுக்கப்பட்டது கிடையாது. ஒரு மாதமாக மக்கள் பார்வைக்கு இது இருக்கிறது.

இந்த நடவடிக்கை தொடர்பாக சிலர் அர்த்தமற்றதாகவும், சரிவர புரிதல் இல்லாமலும், அரசியல் நோக்கத்துக்காகவும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை முதல் முறையும் இல்லை. இதற்கு முந்தைய ஆட்சி காலத்தில் கடுமையான நடவடிக்கை 28 முறை பல்வேறு சேனல்கள் மீது எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுவரை 2 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை அந்த சேனல்களுக்கெல்லாம் தடைவிதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சர்ச்சைக்குரிய மற்றும் தடைசெய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ராணுவத்தின் நலனுக்காக பா.ஜ.க. அரசு தான் உண்மையாக செயல்படுகிறது. காங்கிரஸ் அரசு இதுவரை ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கு வெறும் ரூ.500 கோடி தான் ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டத்துக்காக ரூ.29 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருக்கிறோம்.

தமிழ்நாடு தொழில்துறையில் பின்தங்கி 18-வது இடத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகின. அது வெறும் குறியீடு தான். அந்தந்த அரசாங்கம் தொழில்துறையில் தங்களின் நிலை என்ன? என்பதை ஆராய்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்.

பெரிய அளவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு ஒவ்வொரு மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகளிடம் கட்டுமான நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும். இப்படி ஒவ்வொரு துறைகளிடமும் அவர்கள் அனுமதி பெற பல நாட்கள் ஆகிறது. இதை தவிர்க்கும் விதமாக கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெற புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அதை கொண்டு வர இருக்கிறோம்.

அதற்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் அதுசம்பந்தமாக இறுதி கூட்டம் ஒன்று நடத்தி அந்த திட்டத்தை நிறைவேற்றி அமல்படுத்த இருக்கிறோம். இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் அதிகாரம் வழங்கப்படும். அனுமதிக்கு ஒப்புதல் பெற விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் அவர்களுக்கு அனுமதி வராவிட்டால் அதன்பின்பு அவர்கள் அனுமதி பெற்றதாக கருதி தங்களுடைய கட்டுமான பணிகளை தொடங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.