தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் (வயது74). இவர் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி கிராமத்தைச்சேர்ந்தவர். தற்போது முதுமை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இவரை வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தனர்.
பின்னர் உடல் நிலை சற்று தேறியதால் அவரை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் இன்று காலை திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 8 மணியளவில் பி.எச்.பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.

1980 முதல் 1985 வரை தமிழ்நாடு சட்டமன்ற துணைத்தலைவராக பதவி வகித்தார். 1985 முதல் 1989 வரை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக பதவி வகித்தார். அப்போது பல அதிரடி தீர்ப்புகளை வழங்கி சபாநாயகரின் அதிகாரங்களை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 1989-ம் ஆண்டு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்த போது, ஜானகி ராமச்சந்திரன் அணியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.எல்.ஏ. இவர் ஆவார்.
அதன் பிறகு அ.தி.மு.க. ஒன்றாக இணைந்த பிறகு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பி.எச்.பாண்டியனுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி வழங்கினார். கடந்த 1999-ம் ஆண்டு இவர் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்த சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதன் முதலாக குரல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து தற்போது அ.தி.மு.க.வின் மூத்த தலைவராக ஆலோசனை வழங்கி வந்தார்.
இவரது மகன் மனோஜ் பாண்டியன் தற்போது அ.தி.மு.க. அமைப்புச்செயலாளராக உள்ளார்.

