ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நினைவேந்தி தமிழ் மக்கள் சார்பாக தூபிக்கு சுடர் ஏற்றப்பட்டது.

362 0

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 15 வது ஆண்டு நினைவுகளுடன் ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.இக்கொடூர பேரலையில் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும் நினைவு கூருவதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக .

கடலை நம்பி வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள் இந்தோனேசியாவின் சுமாத்திராதீவில் பெரும் குமுறலாக எழுந்து இந்தோனேசியா தமிழீழம் சிறிலங்கா தமிழ்நாடு உட்பட்ட சில நாடுகளை தாக்கி மிக நீண்ட கடற்கரையோர நிலங்களை அழிவுசெய்து சில மணிநேரத்திலேயே அடங்கிப்போனது. தமிழீழத்தில் முல்லைத்தீவு அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கரையோரப்பிரதேசங்கள் சுனாமிப்பேரலையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கடலால் அள்ளுண்டு போயினர்.இதில் முல்லைத்தீவில் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர். தமிழீழத்தில் பலிகொள்ளப்பட்ட மக்களின் தொகை இருபதாயிரம் ஆகும்.

உலகின் கண்துடைப்பிற்காக சிறி லங்கா இனவெறி அரசு சில உதவிகளை அனுமதித்தது. ஆனால் முழுமையான மீள்கட்டுமானத்திற்கான வேலைகளைத் தடுத்தே வந்தது.ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களை மனித நேயத்தைப் புதைத்துவிட்டு நோக்கிய சிறி லங்காவைப் பற்றி எடுத்துக் கூறினால் அதுவே ஒரு பெரும் தொடராகி விடும். சிறி லங்கா அரசாங்கமோ ‘மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்க மாடேறி மிதித்தவன் மேல் மரத்தைத் தறித்து வீழ்த்துவதற்கு’ ஒப்பான காழ்ப்புணர்வு கொண்ட வேலைகளையே செய்தது.

ஆனால் ஆழிப் பேரலையின் அழிவிற்குப் பின்னர் தனிநாட்டிற்குரிய பண்போடு அன்று எப்படித் தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்களோ அதேபோன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழரிற்காக வேறு யாரால் செயற்பட முடியும்? 2004 ஆம் ஆண்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பணிகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊடகங்களும் பாராட்டின. முல்லைத்தீவிற்கு 03 சன. 2005 அன்று அழிவுகளைப் பார்வையிட சென்ற அன்றைய யுனிசெப் தலைமை இயக்குநர் கரோல் பெலாமி தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்புப் பணியையும் நிவாரண வழங்கலில் உள்ள திட்டமிடலையும் வெகுவாகப் பாராட்டினார்.அமெரிக்காவில் ஷசிக்காக்கோ றைபியூன| பத்திரிகை 07.01.05 அன்று தமிழீழ நிர்வாகத் திறமையைப் பட்டியலிட்டதுடன் தனிநாட்டிற்குரிய செயற்பாடுகளைக் கொண்டதெனவும் விபரித்தது இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது .

தமிழீழ விடுதலையை தமிழ் மக்களின் சுதந்திரத்தை வென்றெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உயிர்களை அர்ப்பணித்து போராடினர் . சிங்கள இனவெறி அரசின் கண்மூடித்தனமான எறிகணைகளால் நச்சுக் குண்டுகளால் தமது உயிர்களை மட்டும் காவி கடலோரம் ஓடிச் சென்ற தமிழ் மக்கள் நீர் நிறைய மலை போல அவர்களின் உடல்கள் குவிந்தன . அதுவே 2009 இல் சிங்கள அரசு மற்றும் சில வல்லரசு நாடுகள் தமிழர்களை அழிக்க உருவாக்கிய செயற்கை சுனாமி .

நிச்சயமாக சுனாமியால் ஏற்பட்ட காயம் வடு இன்னும் மாறாமல் மக்கள் மனதை விட்டு நீங்காமல் பதிந்துவிட்டது. நம்மால் சொத்தை இழந்தவர்களுக்கு பண உதவி புரியலாம். ஆனால் தன் சொந்தத்தை இழந்து உயிருடன் ஜடமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம் மக்களுக்கு இறந்து மண்ணுக்குல் மறைந்து போன நம் உறவுகளுக்கு நம்முடைய பிரார்த்தனைகளை தவிர வேறென்ன அதற்கு ஈடாக கொடுக்க முடியும்.எமது விடுதலைக்காக வித்தாகி சென்ற எமது உறவுகளுக்கு நாம் அவர்கள் எந்த லெட்சியத்திற்காக தமது உயிர்களை அர்ப்பணித்தார்களோ அதற்காக நாம் தொடர்ந்து உழைப்போம் என உறுதி எடுப்போம் .

பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் பல்லாயிரக் கணக்கானோரைக் காவுகொண்ட ஆழிப்பேரலையின் 15 ஆம் ஆண்டை நினைவிற்கொள்ளும் முகமாக பேர்லினில் அமைந்துள்ள தூபிக்கு தமிழ் மக்கள் சார்பாக மலர் செலுத்தி சுடர் ஏற்றப்பட்டது.