யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியின் 3ஆவது பாராளுமன்ற அமர்வு-விஜயகலா மகேஸ்வரனும் கலந்து கொண்டார் (காணொளி)

338 0

kokuvilயாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற 3வது அமர்வு நேற்று நடைபெற்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற சபாநாயகர் தேவகுமார் யுபீரதன் தலைமையில் நடைபெற்ற 3வது அமர்வில் பிரதம விருந்தினராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டார்.

நேற்று நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமான அமர்வில் முதலாவதாக அமைச்சர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கின்ற திட்டங்கள் தொடர்பான விடயங்களை சாபநாயகர் முன்னிலையில் சபையில் தெரிவித்தனர்.

அமைச்சர்களின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான முன்வைப்புக்களைத் தொடர்ந்து சபை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் பிரதி சபாநாயகர் தலைமையில் அமர்வு மீண்டும் ஆரம்பமானது.

கடந்த அமர்வில் திட்டமிடப்பட்டு கல்லூரியில் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் சபையில் தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த அமர்வில் கல்லூரியில் மேற்கொள்ளவிருப்பதாக அமைச்சர்களால் தெரிவிக்கப்பட்டு இதுவரையில் நிறைவேற்றப்படாத மற்றும் பூர்த்தியடையாக்கப்படாத திட்டங்கள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களும் அமைச்சர்களால் வழங்கப்பட்டது.

மாணவர்கள் தற்பொழுது கல்விச் செயற்பாடுகளுக்கு இடையூறாக காணப்படுகின்ற வகுப்பறைச் சூழல் தொடர்பான பிரச்சினைகளை உறுப்பினர்களால் சபையில் முன்வைக்கப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத் தருமாறு அமைச்சர்களிடம் வலியுறுத்தப்பட்டன.

மாணவர் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என பிரதி சபாநாயகர் பிறேமிகா தயாபரனால் சபையில் அறிவிக்கப்பட்டது.
அமர்வு நிறைவில் பிரதம விருந்தினர் கௌரவிப்பு இடம்பெற்றதுடன் சபாநாயகர் தேவகுமார் யுபீரதன், பிரதி சபாநாயகர் பிறேமிகா தயாபரன், பிரதமர் சரவணபவசர்மா சாத்வீகசர்மா, சபைமுதல்வர் ஜெயராஜா ராஜசிவானுஜன், குழுத் தலைவர் ஜெயபாலன் ஜென்ரன், அமைச்சரவை செயலாளர் ரவிச்சந்திரன் போல் கிசோர், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான அடையாள சின்னங்களும் பிரதம விருந்தினரால் சூட்டிவைக்கப்பட்டது.

குறித்த மாணவர் பாராளுமன்ற அமர்வில் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.